< Back
தலையங்கம்
தமிழ்நாட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடியின் உத்தரவாதம்!
தலையங்கம்

தமிழ்நாட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடியின் உத்தரவாதம்!

தினத்தந்தி
|
2 April 2024 6:18 AM IST

பிரதமர் மோடியின் தேர்தல் சுற்றுப்பயணத்தில் தமிழ்நாடு முக்கிய இடம் வகித்துள்ளது.

சென்னை,

18-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதிலும் உள்ள 543 தொகுதிகளில், வரும் 19-ந்தேதி முதல் 7 கட்டங்களாக நடக்கிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிவரும் பிரதமர் நரேந்திரமோடி, பிரசார பொதுக்கூட்டங்களில் பேசும்போது, "தங்கள் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது நிச்சயம்" என்று மார்தட்டி நம்பிக்கையுடன் கூறிவருகிறார். அவருடைய மந்திரிசபையில் உள்ள மந்திரிகளிடமும், துறை செயலாளர்களிடமும் தேர்தல் முடிந்து 3-வது முறையாக ஆட்சி அமைத்தவுடன் முதல் 100 நாட்களுக்கான செயல் திட்டங்கள் என்ன? என்பதை வகுத்து தயாராக வைத்திருக்கும்படி கட்டளையிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தேர்தல் சுற்றுப்பயணத்தில் தமிழ்நாடு முக்கிய இடம் வகித்துள்ளது. ஏற்கனவே 5 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்துவிட்டார். இன்னும் சில இடங்களுக்கு வரப்போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் மும்முரமாக தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருப்பதால், இதுவரை எந்த பத்திரிகைக்கும், எந்த டெலிவிஷனுக்கும் என பிரத்தியேக பேட்டி கொடுக்கவில்லை. ஆனால், 'தினத்தந்தி' குழுமத்தில் அங்கம் வகிக்கும் 'தந்தி டி.வி.'க்குத்தான் நாட்டிலேயே முதன் முதலாக பிரத்தியேக பேட்டி கொடுத்திருக்கிறார். பேட்டி கொடுக்கும்போது, பிரதமர் நரேந்திரமோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து தமிழ் கலாசாரத்தின் மீது தனக்கு உள்ள பற்றை, பாசத்தை வெளிப்படுத்தினார்.

இந்த பேட்டியின்போது அவர் 'தந்தி' டி.வி. செய்தியாளர்களிடம் ஒரு பிரதமரைப்போல அணுகாமல், ஒரு குடும்பத்தில் உள்ள சக உறுப்பினர்களிடம் பேசுவது போல சகஜமாக பதில் அளித்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்த பேட்டியில் அரசியல், ஆன்மிகம், தமிழ் கலாசாரம், பாரம்பரியம் தொடர்பான பல சுவையான கேள்விகளுக்கு மிக விறுவிறுப்பாக, சுவாரஸ்யமாக பதில் அளித்தார். தமிழ்நாட்டு உணவில் எனக்கு உப்புமா பிடிக்கும், பொங்கல் பிடிக்கும் என்ற அளவில் அனைத்து விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார்.

பேட்டியின் நிறைவாக, தந்தி டி.வி. செய்தியாளர்கள், தமிழ்நாட்டின் நலனுக்கான ஒரு கேள்வியைக்கேட்டனர். அதாவது, "மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு பிரதமர் அளிக்கும் உத்தரவாதம் என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "வளர்ச்சியடைந்த பாரதத்துக்கு, வளர்ச்சியடைந்த தமிழ்நாடு. இந்தியாவுக்காக மிகப்பெரிய ராணுவ தொழிற்தடம் தமிழ்நாட்டில் அமையும், இது என்னுடைய மிகப்பெரிய உத்தரவாதம். அடுத்தது துறைமுகத் துறை. அண்மையில் தூத்துக்குடியில் ஒரு துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். வருங்காலத்தில் தூத்துக்குடி துறைமுகம், துறைமுகத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர இருக்கிறது. சுற்றுலாத் துறையில் பார்த்தால், அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலம் தமிழ்நாடு. பாரதத்தில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய உள்ளது. இவ்வாறு நான் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்க முடியும்" என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

பேட்டியின் தொடக்கத்தில், தனக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள 50 ஆண்டுகால தொடர்பை, அந்த நாள் ஞாபகங்களோடு எடுத்துக்கூறிய பிரதமர் நரேந்திரமோடி, நிறைவாக தமிழ்நாட்டுக்கான உத்தரவாதத்தை கூறி முடித்துள்ளார். அனைத்து துறையிலும் தமிழ்நாட்டுக்கு உத்தரவாதம் வாங்கித்தந்த தந்தி டி.வி.யின் பிரத்தியேக பேட்டி, தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டுவிட்டது.

மேலும் செய்திகள்