தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
|தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டன.
அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களை எடுத்துப்பார்த்தால், 2014-ல் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 12-ந்தேதி வரை 9 கட்டங்களாகவும், 2019-ம் ஆண்டில் ஏப்ரல் 11-ந்தேதி முதல் மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாகவும் நடந்தது. ஆனால் தேர்தல் அறிவிக்கை மார்ச் 10-ந் தேதி வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்த ஆண்டு நடக்க வேண்டிய தேர்தல் சில நாட்கள் முன்கூட்டியே நடக்க இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த தேர்தலின் போது அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்த பா.ஜனதா கடந்த 22-ந்தேதி அதை கட்டிமுடித்து பிரதிஷ்டையும் செய்த நிலையில், அதையே ஒரு பெரிய ஆயுதமாக கையில் எடுத்து தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதுதான் தனக்கு மிகவும் சாதகமான நேரமாகவும் பா.ஜனதா கருதுகிறது.
இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி 11 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 'டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் நடத்த உத்தேச தேதியாக ஏப்ரல் 16-ந்தேதியை தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது. எப்படியும் பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் பல கட்ட தேர்தல் தொடங்கிவிடும் என கூறப்படுகிறது. டெல்லியில் ஏப்ரல் 16-ந்தேதி தேர்தல் என்பது 2-வது கட்டம் அல்லது 3-வது கட்டமாக இருக்கும் என்று தகவல்கள் வருகின்றன.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில், ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி பயணம் தங்களுக்கு வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டன. தி.மு.க. சேலத்தில் இளைஞரணி மாநாட்டை நடத்தியதோடு மட்டுமல்லாமல், தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி தேர்தல் பணியை தொடங்கிவிட்டார். தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கொண்ட குழு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கனிமொழி குழு பணிகளை தொடங்கிவிட்டது. காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு குறித்து தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.
அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக்குழு, தேர்தல் விளம்பரக்குழு என்று 4 குழுக்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். அந்த குழுக்களும் பணிகளை தொடங்கிவிட்டன. மற்ற அரசியல் கட்சிகளிலும் தேர்தலை எதிர்நோக்கி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஆக வரப்போகும் நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தலை மையமாக வைத்தே அனைத்து கட்சிகளின் இயக்கமும் இருக்கப்போகிறது. பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமும் இருக்காது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆளப்போவது யார்? என்பதை முடிவு செய்யப்போகும் மக்களும் மனக்கணக்கை போட தொடங்கிவிட்டார்கள்.