வங்காளதேசத்தில் ஆட்சியை தூக்கியெறிந்த மக்கள் சக்தி!
|வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான மக்கள் ஆட்சி தூக்கியெறியப்பட்டு ராணுவ ஆட்சி இப்போது நடக்கிறது.
இந்தியாவின் அண்டை நாடாகவும் நட்பு நாடாகவும் திகழ்ந்த வங்காளதேசத்தில் மக்கள், குறிப்பாக இளைஞர் சமுதாயம் கிளர்ந்தெழுந்ததால் ஷேக் ஹசீனா தலைமையிலான மக்கள் ஆட்சி தூக்கியெறியப்பட்டு ராணுவ ஆட்சி இப்போது நடக்கிறது.
1971-ம் ஆண்டு வங்காளதேசம் உருவானபோது கொண்டுவரப்பட்ட அரசியல் சட்டம் ஜனநாயகம், சோசலிசம், மதச்சார்பின்மை மற்றும் தேசியவாதத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. முஜிபுர் ரகுமானை கொண்டு ஆட்சி நடந்தது. 1975-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதி மேற்கு வங்காளதேசத்தின் முப்படைகளும் நடத்திய ராணுவ புரட்சியில் முஜிபுர் ரகுமானும் அவரது குடும்பத்தை சேர்ந்த 40 பேரும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில், ஷேக் ஹசீனா அணுசக்தி விஞ்ஞானியான தனது கணவருடன் ஐரோப்பாவில் வசித்துவந்தார். அவருடைய சகோதரி ரெஹ்னாவும் அவருடன் இருந்ததால் இருவரும் உயிர் தப்பினார்கள்.
அதன்பிறகு காலம் மாறியது. ஷேக் ஹசீனா, இந்திராகாந்தி உதவியால் நாடு திரும்பினார். அவாமி லீக் கட்சியின் தலைமை பொறுப்பை வகித்ததுடன் பிரதமராகவும் பதவி ஏற்றார். 15 ஆண்டுகள் பதவியில் இருந்த அவர், நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்த பெண் என்ற புகழைப்பெற்றார். இந்த நிலையில், 1971-ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போரில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை பிறப்பித்ததுதான் இளைஞர்களை கொந்தளிக்க செய்தது. அது அவரது ஆட்சிக்கே உலைவைத்துவிட்டது.
"இந்த உத்தரவு அவாமி லீக் கட்சியினருடைய வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம், அதுவும் 3-வது வாரிசுகளுக்கும் பொருந்தும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்படுகிறது" என்று கருதிய இளைஞர் சமுதாயம் போராட்டத்தில் குதித்தது. இளைஞர் சக்தியின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாமல் இந்த சட்டத்தை ஷேக் ஹசீனா ரத்து செய்தார். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக கடந்த மாதம் (ஜூலை) 21-ம் தேதி நிர்ணயித்து உத்தரவிட்டது. இதனால், அங்கு மீண்டும் இளைஞர் போராட்டம் வெடித்தது. வேறு வழியில்லாமல், பிரதமர் ஷேக் ஹசீனாவும் ராணுவத்தின் கட்டளைக்கிணங்க பதவியைவிட்டு விலகி தன் சகோதரியுடன் நாட்டைவிட்டு கிளம்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இப்போது, வங்காளதேசத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. விரைவில் ஜனநாயக ஆட்சி மலரும் என்று சொன்னாலும், இனி ஷேக் ஹசீனா மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அவர் இனி நாடு திரும்ப வாய்ப்பு இல்லை. அவர் இங்கிலாந்து, பெலாரஸ் அல்லது பின்லாந்து நாடுகளில் ஒன்றில் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனா இந்தியாவோடு நட்புறவு கொண்டவர். பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால், இப்போதுள்ள இளைஞர்கள் அங்குள்ள இந்து கோவில்களை தகர்த்திருப்பதை பார்க்கும்போது, இனி வரும் அரசாங்கம் இந்தியாவோடு நட்புறவு கொள்ள வாய்ப்பு இல்லை. ஏற்கனவே, பாகிஸ்தான் நட்புறவு கொண்டிருக்கும் சீனாவுடன் வங்காளதேசமும் சேர்ந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது, ஆட்சிக்கு வர துடித்துக் கொண்டிருக்கும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் கலீதா ஜியா சிறையில் இருந்து விடுதலையான நிலையில், "ஷேக் ஹசீனா இந்திய அரசாங்கத்தோடு மேற்கொண்ட அனைத்து ஒப்பந்தங்களும் மறு ஆய்வு செய்யப்படும்" என்று கூறியிருப்பது, இந்தியாவுடனான நட்புறவு நீடிக்குமா?, நிலைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.