வருமான வரம்பு இல்லாத முதியோர் மருத்துவ காப்பீட்டு திட்டம் !
|70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார்.
சென்னை,
மருத்துவ செலவு என்பது எல்லோருக்கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. அதிலும், 70 வயதை கடந்த முதியோர்களுக்கு கட்டாயம் வரக்கூடிய செலவாகும். அரசு ஊழியராக பணியாற்றி மாதந்தோறும் பென்ஷன் பெறுபவர்களை தவிர, மற்றவர்கள் முதிர் வயதில் வருமானம் இல்லாமல் வாடும்போது, மருத்துவ செலவும் வந்துவிட்டால் தவித்துப்போய்விடுகிறார்கள். அரசு மருத்துவமனைகள் ஆபத்பாந்தவனாக தெரிந்தாலும், அங்கு மருத்துவ சேவைகள் முழுமையாக கிடைப்பதில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆத்திர அவசரத்துக்கு தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதிக பணமும் செலவாகிறது.
இதுபோன்ற இக்கட்டான நிலையை தடுக்கத்தான், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். இந்த தகவலை கேள்விப்பட்டவுடன், 70 வயதை கடந்த முதியோர்கள், "அப்பாடா.. இனி எந்தக் கவலையும் இல்லை" என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். காரணம், தனியார் மருத்துவ காப்பீடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவ காப்பீடு எடுக்க முடியாதநிலை இருந்தது. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எல்லா நோய்களும் அழையா விருந்தாளியாக வந்து சேரும் என்பதால், அப்படிப்பட்டவர்களுக்கு பிரதமரின் அறிவிப்பு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.
இப்போது மத்திய மந்திரி சபை கூட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் எந்தவித வருமான உச்சவரம்பும் இல்லாமல் வழங்கப்படும் என்பதுதான். அந்த வகையில், இந்தியாவிலுள்ள 4½ கோடி குடும்பங்களிலுள்ள 6 கோடி முதியோர் இந்த திட்டத்தின் பலனை பெற முடியும். இவர்களில் 58 சதவீதம் பேர் பெண்கள். அதிலும், 54 சதவீதம் பேர் விதவைகள். ஆக, முதியோர் எல்லோருக்குமே இந்த திட்டம் மிகவும் பலனளிக்கும்.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் அனைவரும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு அளிக்கும் 'ஆயுஷ்மன் பாரத் யோஜனா' என்று சொல்லப்படும் பிரதமரின் 'ஜன் ஆரோக்கிய யோஜனா' என்ற திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். ஆனால், அவர்களுக்கான காப்பீடு மொத்த தொகையோடு சேர்க்கப்படாது. அவர்களுக்கென தனியாக ரூ.5 லட்சம் வழங்கும் வகையில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில், முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டம் தனியாக செயல்பாட்டில் இருந்தாலும், இந்த மத்திய அரசாங்கத்தின் ஆயுஷ்மன் மருத்துவ காப்பீட்டு திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு மத்திய அரசாங்கத்தின் பங்களிப்பு 60 சதவீதம், மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதம்.
ஆனால், முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வருமானம் உள்ளவர்களால் மட்டுமே பயன்பெற முடியும். வயது வரம்பும் கிடையாது. இப்போது மத்திய அரசாங்கத்தின் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தோடு இணைக்கும்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான உச்ச வரம்பு இல்லாமல் இருக்கும். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 80 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் 70 வயதை கடந்தவர்கள். இவர்களுடைய முக்கிய கோரிக்கை, "ஆஸ்பத்திரியில் தங்கி எடுக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருந்து-மாத்திரைகள் வாங்குவதற்கோ வழங்கப்படுவதில்லை. அந்தச் செலவையும் இதில் சேர்க்க பரிசீலிக்கவேண்டும்" என்கிறார்கள்.