நிச்சயமாக பெண்களுக்கு இது விடியல்தான்!
|தமிழ்நாடுதான் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்திட்டத்தை நிறைவேற்றியதில் முன்னோடி மாநிலம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
நாடாளுமன்ற தேர்தலில் 7 கட்டமாக நடந்துவந்த வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் முடிவுகளும் வெளிவந்துவிட்டன. நாடு இந்த தேர்தல் பிரசாரத்தின்போது, ஒரு பக்கம் பிரதமர், மறுபக்கம் எதிர்க்கட்சி தலைவர்கள் என இரு தரப்பினருக்கு இடையே சொற்போர் உச்சக்கட்டத்தை அடைந்து இப்போது புயலுக்கு பின் அமைதி என்பதுபோல ஒரு அமைதியான சூழ்நிலை நிலவுகிறது.
கடைசி கட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி அளித்த ஒரு பேட்டியில், இலவச பஸ் பயணத்திட்டத்தை விளாசிவிட்டார். மாநில அரசுகளை நோக்கி அவர், "நீங்கள் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டுவருகிறீர்கள். ஆனால், அதேநேரத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டம் கொண்டுவருவது பற்றி வாக்குறுதி அளிக்கிறீர்கள். இதன்மூலம் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் 50 சதவீத பயணிகளை எடுத்து சென்றுவிடுகிறீர்கள். போக்குவரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்க வைத்துவிடுகிறீர்கள். பஸ் பயணத்தை இலவசமாக்கி, மெட்ரோ ரெயிலின் வருமானத்தை காலியாக்கிவிடுகிறீர்கள். எப்படி மெட்ரோ ரெயில் முன்நோக்கி செல்லமுடியும்? நாடு எப்படி முன்னேற்றத்தை காணமுடியும்?" என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்.
பிரதமர் பெண்களுக்கான இலவச பயணத்தை அமல்படுத்தும் மாநிலங்களை பெயரிட்டு சொல்லாவிட்டாலும், தமிழ்நாடுதான் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்திட்டத்தை நிறைவேற்றியதில் முன்னோடி மாநிலம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டு, தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றியை பெற்று, முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்ட 5 உத்தரவுகளில் முதல் உத்தரவாக, அனைத்து மகளிரும் சாதாரண டவுன் பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது இடம்பெற்றிருந்தது.
பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த திட்டம், பெண்களுக்கான விடியல் பயணத் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த திட்டம், மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டது என்று கூறிய பிரதமர் நரேந்திரமோடியின் குற்றச்சாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுத்துள்ளார். 2019-ல் 3 கோடியே 28 லட்சம் என்றிருந்த சென்னை மெட்ரோ ரெயில் பயணங்கள், 2023-ல் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்திட்டம் அமலுக்கு வந்தபிறகும் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை என்று பதில் அளித்தார்.
மெட்ரோ ரெயில் என்பது தலைநகர் சென்னையில் மட்டுமே ஓடுகிறது. ஆனால், பெண்களுக்கான விடியல் பயணம் என்பது தமிழ்நாடு முழுவதிலும் அரசு டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யவைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் சாதாரண ஏழை-எளிய பெண்கள் மாதம் ரூ.541 முதல் ரூ.1,283 வரை மிச்சம் பிடிக்கிறார்கள். இந்த தொகையை அவர்களால் சேமிக்கவும் முடிகிறது. விலைவாசி உயர்வை சமாளிக்கவும் முடிகிறது. கிராமங்களில் உள்ள கடைகளிலும் வியாபாரம் பெருகுகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமூக புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. ஒரு நாளைக்கு 55 லட்சம் பெண்கள் 5,984 வழித்தடங்களில் உள்ள 7,179 பஸ்களில் டிக்கெட் எடுக்கவேண்டிய அவசியம் இல்லாமல் பயணம் செய்கிறார்கள். மொத்தத்தில் இந்த விடியல் பயணத்திட்டம் தமிழக பெண்கள் வாழ்வில் தினந்தோறும் விடியலை ஏற்படுத்துகிறது. பெண்களை மகிழ்ச்சியோடு பயணம் செய்யவைக்கும் ஒரு பூரிப்பு திட்டம் இது.