< Back
தலையங்கம்
வாய்ப்பு மட்டுமல்ல; சவாலும் தான்!
தலையங்கம்

வாய்ப்பு மட்டுமல்ல; சவாலும் தான்!

தினத்தந்தி
|
3 July 2024 10:43 AM IST

ராகுல்காந்தி 236 ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினர்களையும் தன்னோடு சேர்த்து இயங்கச் செய்யவேண்டிய பெரும் பொறுப்பில் இருக்கிறார்.

சென்னை,

18-வது மக்களவை பல புதுமைகளை அரங்கேற்றியிருக்கிறது. இருமுறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்திய பா.ஜனதா இந்த முறை தனிப்பெரும்பான்மையை இழந்து தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அதுபோல, மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், இதுவரை பிஜூ ஜனதா தள உறுப்பினர்களின் ஆதரவோடு பல மசோதாக்களை நிறைவேற்ற முடிந்த நிலையில், இந்த தேர்தலில் 5 முறை ஒடிசா முதல்-மந்திரியாக இருந்த நவீன் பட்நாயக்கால் ஆட்சி அமைக்க முடியாத அளவு பா.ஜனதா, பிஜூ ஜனதா தளத்தை எதிர்த்து போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால், நவீன் பட்நாயக் தனது கட்சியின் சார்பில் மாநிலங்களவையில் இருக்கும் 9 உறுப்பினர்களையும் பா.ஜனதாவுக்கு எதிராக செயல்பட சொல்லியிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவராகியிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை ஒரு கட்சி தலைவர் பெறவேண்டுமென்றால், அவர் சார்ந்து இருக்கும் கட்சி மொத்தம் உள்ள 543 இடங்களில் பத்தில் ஒரு பங்கு இடங்களைப்பெறவேண்டும். அதாவது, 55 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதுவரை 18 மக்களவைகளில், 9-ல் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துடன் எந்தக் கட்சி தலைவரும் செயல்பட முடியவில்லை. ஏன் காங்கிரஸ் கட்சிக்குகூட 2014, 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் 55 இடங்களில்கூட வெற்றி கிடைக்காததால், எதிர்க்கட்சி தலைவர் இல்லாமலேயே இந்த இரு அவைகளும் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றதால், ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவராகி விட்டார். இது சாதாரண பதவியல்ல, ஒரு கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொண்ட பதவி.

ராகுல்காந்தி அரசியலில் குதித்து 20 ஆண்டுகள் ஆகின்றன. இப்போதுதான் முதல் முறையாக ஒரு அரசியல் சாசன பதவிக்கு வந்திருக்கிறார். இது அவருக்கு ஒரு அரிய வாய்ப்பு மட்டுமல்ல, அவருக்கு உள்ள ஒரு பெரிய சவாலும் கூடத்தான். எதிர்க்கட்சி தலைவரின் வாதங்களும், கருத்து வெளிப்பாடுகளும் ஒட்டுமொத்த நாட்டையே உற்று நோக்க வைக்கும். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், அவர் கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டாளரின் அறிக்கைகள் மற்றும் பல்வேறு அரசு திட்டங்களை ஆய்வு செய்யும் பொதுக்கணக்கு குழு தலைவராக இருப்பார். லோக் பால், தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள், சி.பி.ஐ. இயக்குனர் போன்ற முக்கிய பணிகளில் உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், தலைமை நீதிபதியோடு எதிர்க்கட்சி தலைவரும் இருப்பார்.

இப்போது, ராகுல்காந்தி 236 'இந்தியா' கூட்டணி உறுப்பினர்களையும் தன்னோடு சேர்த்து இயங்கச் செய்யவேண்டிய பெரும் பொறுப்பில் இருக்கிறார். அவர் அவையில் இருக்கும்போது எந்த பிரச்சினை வந்தாலும் சரி, அதுகுறித்து சிறந்த கருத்துகளை தெரிவிக்கும் பேச்சாற்றல் மிக்கவராக இருக்க வேண்டும். அரசாங்கத்தின் கருத்துகளுக்கோ, திட்டங்களுக்கோ எதிர்க்கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்தால், அதற்கு மாற்றான கருத்தையோ, திட்டங்களையோ வெளிப்படுத்த அவரும் தயாராக இருக்க வேண்டும்.

மொத்தத்தில் ஒரு தலைசிறந்த அரசியல்வாதியாக எதிர்க்கட்சி தலைவர் திகழ்ந்தால்தான் அந்த பதவியை அலங்கரிக்க முடியும். ராகுல்காந்திக்கு கிடைத்துள்ளது வாய்ப்பு மட்டுமல்ல, சவாலும்தான் என்பதை நேற்று முன்தினம் அவையில் அவருக்கும், பிரதமர் மோடி, அமித்ஷா, அனுராக் தாக்கூருக்கும் இடையே நடந்த காரசார விவாதமும், மந்திரிகள் 18 முறை இடைமறித்த குறுக்கீடுகளுமே நிரூபித்துவிட்டன.

மேலும் செய்திகள்