நிதிஷ்குமார் பல்டி; பா.ஜனதாவுக்கு லாபம்!
|பீகாரும் பா.ஜனதா பக்கம் வந்துவிட்டதால், இந்தி பேசும் மாநிலங்கள் அனைத்தும் பா.ஜனதா வசமாகிவிடும்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எல்லாமே பா.ஜனதாவுக்கு லாபமாகத்தான் இருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட 28 கட்சிகள் சேர்ந்து 'இந்தியா' என்ற மெகா கூட்டணியை உருவாக்கின. 'இந்தியா' கூட்டணி உருவாக ஒரு காரணமாக இருந்த நிதிஷ்குமார், அந்த அணியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவோம் என்றும் எதிர்பார்த்தார். ஆனால், இரண்டும் நடக்கவில்லை.
'இந்தியா' கூட்டணியில் தனக்கு உரிய கவுரவம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்தார். கடைசியாக நடந்த 'இந்தியா' கூட்டணி காணொளி கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. தொகுதி பங்கீட்டிலும் இழுபறி நீடித்தது. 243 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பீகாரில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்.எல்.ஏ.க்கள்தான் இருக்கிறார்கள். ஆனால், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளத்துக்கு 79 உறுப்பினர்களும், பா.ஜனதாவுக்கு 78 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 19 உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிக்கு 12 உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பீகார் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட நிதிஷ்குமார், தேர்தல் முடிவுக்கு பிறகு அந்த கூட்டணி அரசின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பா.ஜனதாவோடு இருந்த கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், சர்க்கசில் பார் விளையாடுவதுபோல, ராஷ்டிரீய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணிக்கு தாவி, அந்த கூட்டணி அரசில் முதல்-மந்திரி ஆனார். லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரி ஆனார். இப்போது மீண்டும் பழைய கூட்டணிக்கே திரும்பி முதல்- மந்திரியாகி இருக்கிறார்.
நேற்று முன்தினம் காலையில் ராஷ்டிரீய ஜனதா தள கூட்டணி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மாலையில் பா.ஜனதா கூட்டணி முதல்-மந்திரியாக பதவியேற்றார். அரசியலில் இது பெரிய ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. 9-வது முறையாக பீகார் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார், கடந்த 2015 முதல் இதுவரை 5 தடவை அணிமாறி பெரிய சாதனையை செய்துள்ளார். நிதிஷ்குமாரின் இந்த அணி தாவல் பா.ஜனதாவுக்குத்தான் அரசியல் ரீதியாக பெரும் லாபம். நிதிஷ்குமார் முதல்-மந்திரி என்றாலும், ஆட்சி நடத்தப்போவது பா.ஜனதாதான்.
பா.ஜனதா சார்பில் 2 துணை முதல்-மந்திரிகள் இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் குர்மி இன வாக்குகள் பா.ஜனதாவுக்கு கிடைக்கும். பீகாரும் பா.ஜனதா பக்கம் வந்துவிட்டதால், இந்தி பேசும் மாநிலங்கள் அனைத்தும் பா.ஜனதா வசமாகிவிடும். இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள 218 தொகுதிகளை அப்படியே அள்ளவேண்டும் என்பது பா.ஜனதாவின் இலக்கு. இப்போது, இந்தி பேசும் மாநிலங்களில் பீகார், சத்தீஷ்கார், அரியானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியே இருப்பதால், இது சாத்தியம் என்று பா.ஜனதா கருதுகிறது. ஏற்கனவே, இந்தியா கூட்டணியில் மம்தா பானர்ஜியும், டெல்லி, பஞ்சாப்பில் அரவிந்த் கெஜ்ரிவாலும், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்ற நிலையில், பீகாரும் தங்கள் வசமானது பா.ஜனதாவுக்கு பலம்தான். எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் நிதிஷ்குமாரின் அரசியல் பல்டி பா.ஜனதாவுக்குத்தான் லாபம்.