< Back
தலையங்கம்
New technology in weather forecasting!
தலையங்கம்

வானிலை முன்னறிவிப்பில் புதிய தொழில் நுட்பம்!

தினத்தந்தி
|
6 Aug 2024 6:36 AM IST

வானிலையை கணிக்கும் புதிய தொழில் நுட்பங்களை கண்டறிந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

சென்னை,

புவி வெப்பமயமாதலுக்கு பிறகு பருவநிலைகளை முறையாக கணிக்கமுடியவில்லை. மழைகாலத்தில்தான் மழை பெய்யும், கோடை காலத்தில்தான் வெயில் அடிக்கும் என்று அறுதியிட்டு சொல்லமுடியாத நிலை இருக்கிறது. மழை காலத்தில் சில நேரங்களில் அதிகனமழை பெய்து பெரும் அழிவை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு காலத்தில், "மழைத்துளி.. மழைத்துளி.. மண்ணில் சங்கமம்" என்று ரசித்த மக்கள், இப்போது மழை பெய்தால் என்ன பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என்று அஞ்சும் நிலை இருக்கிறது. பருவநிலை மாறியதுபோல மக்களின் மனநிலையும் மாறிவிட்டது.

'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரளாவில் இப்போது தென்மேற்கு பருவமழை காலம். இந்த காலக்கட்டத்தில் மழை முறையாக பெய்தால், போதிய தண்ணீர் கிடைக்கும். ஆனால், கடந்த மாதம் 30-ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில், சுற்றுலா தலமான வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகாலை 2 மணிக்கும் 4.10 மணிக்கும் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் அடிவாரத்தில் உள்ள வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் உயிரோடு சமாதியானார்கள். பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாண்டனர். வீடுகள் எல்லாம் மண்ணுக்குள் புதைந்து காணாமல் போனது.

ஒரு பக்கம் கடும் போராட்டத்துக்கு மத்தியில் மீட்பு பணிகள் நடந்தாலும், மற்றொரு பக்கம் இதுபோன்ற பேரிடரை வானிலை ஆய்வு மையத்தால் ஏன் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை? என்ற கேள்வியும் எழுந்தது. பொதுவாக, 24 மணி நேரத்தில் 6.4 சென்டி மீட்டருக்கும் குறைவாக மழை பெய்யும் என்று கருதினால் பச்சை நிற எச்சரிக்கையும், 6.5 சென்டி மீட்டர் முதல் 11.5 சென்டி மீட்டர் வரை மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்பட்டால் மஞ்சள் நிற எச்சரிக்கையும், 11.6 சென்டி மீட்டர் முதல் 20.4 சென்டி மீட்டர் வரை மழை பெய்யும் என்று கணக்கிட்டால் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், 20.5 சென்டி மீட்டர்க்கு மேல் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டால் சிவப்பு நிற எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடப்படும்.

ஆனால், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது 57.2 சென்டி மீட்டர் மழை பெய்தும், வானிலை ஆய்வு மையத்தால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட நாள் அன்று பகல் 1.10 மணிக்குத்தான் வானிலை ஆய்வு மையத்தால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, "உரிய எச்சரிக்கைகள் முன்கூட்டியே கேரள அரசாங்கத்துக்கு வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார். ஆனால், "அதுபோன்ற எச்சரிக்கை எதுவும் முன்கூட்டியே வரவில்லை" என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மறுத்துள்ளார்.

இப்படி, எல்லாமே நடந்து முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை. இதில் அரசியல் தேவையில்லை. நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்றாலும், அதற்கான வாய்ப்பு இருக்கும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இனி வானிலையை முன்கூட்டியே துல்லியமாக கணிக்கும் புதிய தொழில் நுட்பங்களை கண்டறிந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு துல்லியமாக கணிக்கும்போது இயற்கை பேரிடரை தடுக்க முடியாவிட்டாலும், மக்களை அங்கிருந்து வெளியேற்றி உயிர்களை காக்க முடியும்.

மேலும் செய்திகள்