இயற்கைதான் கை கொடுக்க வேண்டும் !
|சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி ஆண்டுதோறும் கர்நாடகா மேட்டூர் அணைக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவேண்டும்.
சென்னை,
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதிகள் கருதப்படுகின்றன. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் காவிரி தண்ணீரை நம்பியே விவசாயம் செய்யும் டெல்டா மாவட்டங்களாக இருக்கின்றன. இந்த மாவட்ட விவசாயிகள் கர்நாடக மாநில அணைகளில் இருந்து மேட்டூருக்கு திறந்துவிடப்படும் தண்ணீரைத்தான் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் டெல்டா மாவட்ட விவசாயிகள் 3 சாகுபடிகளை மேற்கொள்வார்கள். 105 நாட்கள் பயிரான குறுவை சாகுபடி ஜூன் மாதம் நாற்று நட்டு செப்டம்பரில் அறுவடை ஆகும். அடுத்து 135 நாள் முதல் 155 நாள் வரை பயிரான தாளடி சாகுபடி, குறுவை அறுவடை முடிந்தவுடன் அந்த வயல்களில் அக்டோபரில் தொடங்கி பிப்ரவரி வரை நடக்கும். 180 நாட்கள் பயிரான சம்பா சாகுபடி நாற்று நடுதல் ஜூலை மாத மத்தியில் தொடங்கி, அறுவடை ஜனவரி மாதம் பொங்கலையொட்டி நடக்கும். இப்படி முப்போகம் விளையவேண்டும் என்றால், ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்தால்தான் முடியும்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையொட்டி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி ஆண்டுதோறும் கர்நாடகா மேட்டூர் அணைக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவேண்டும். மேலும், நடுவர் மன்றம் ஒப்புதல் அளித்தபடி 18.56 லட்சம் ஏக்கரில் சம்பா பயிரிடலாம். ஆனால், கர்நாடக அரசு ஒருபோதும் இதன்படி தண்ணீர் திறந்து விடுவதில்லை. தென்மேற்கு பருவமழை பலமாக பெய்து கர்நாடக அணைகளெல்லாம் நிரம்பி வழிந்து, மேற்கொண்டு தண்ணீரை தேக்கிவைக்க முடியாது என்றநிலை வரும்போதுதான் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுகிறார்கள். இந்த ஆண்டு கர்நாடகம் உரிய நேரத்தில் தண்ணீரை திறந்துவிடாததால், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாமல் போனது. இதனால், வழக்கமாக தண்ணீர் திறக்கும் நாளான ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முடியவில்லை.
'தமிழகத்துக்கான தண்ணீர் பங்கீட்டை முறையாக கொடுக்கச் செய்யுங்கள்' என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார். கடந்த 11-ம் தேதி டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் ஜூலை 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தினமும் ஒரு டிஎம்சி, அதாவது 11,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், கர்நாடக அரசோ, தினமும் 8 ஆயிரம் கனஅடி தண்ணீரைத்தான் திறந்துவிடுவோம் என்று உறுதிபட கூறிவிட்டது.
இதற்கு மத்தியில், இயற்கை தன் கருணை பார்வையை வீசியது. கடந்த 14-ம் தேதி முதல் கர்நாடகாவின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கபினி அணை நிரம்பிய நிலையில், தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணையும் முழுக் கொள்ளளவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இயற்கையின் கொடையால் இப்போது மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பிக் கொண்டிருக்கிறது. இயற்கை அன்னை இதேபோல தொடர்ந்து கை கொடுத்தால், அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். விவசாயிகளும் உழவு பணியை ஆரம்பித்து நடவு வேலைகளை தொடங்கி விடுவார்கள். எல்லாமே இயற்கையின் கையில்தான் இருக்கிறது.