உச்சக்கட்ட நம்பிக்கையில் நரேந்திரமோடி!
|பா.ஜனதா 370 இடங்களில் வெற்றிபெறும், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று பிரதமர் மோடி கூறிவருகிறார்.
18-வது நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. ஒரு புறம் பா.ஜனதா கூட்டணியும் மற்றொரு புறம் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் போன்ற பல கட்சிகளை உள்ளடக்கிய 'இந்தியா' கூட்டணியும் தேர்தல் களத்தில் மோத தயாராக இருக்கின்றன. இரு அணிகளிலும் இன்னும் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள்? என்ற ஒதுக்கீடு முடியவில்லை.
இதற்கிடையே, 'இந்தியா' கூட்டணியிலுள்ள பல மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜனதாவில் இணைந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் கூட விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதாவில் சேர்ந்துவிட்டார். பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், 'இந்தியா' கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதா கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார்.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும், இரு அணி தலைவர்களும் முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். பிரதமர் நரேந்திரமோடி, அரசு முறை பயணமாக பல மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்துவருகிறார். அப்படி செல்லும்போது, "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என்பதுபோல, கட்சி பொதுக்கூட்டங்களிலும் அவர் பங்கேற்று ஓட்டு வேட்டையையும் தொடங்கிவிட்டார். வருகிற 13-ந்தேதியுடன் அரசு முறை பயணங்களை முடித்துக்கொள்ளும் பிரதமர் நரேந்திரமோடி, அதன்பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் சூட்டோடு சூடாக அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், கடந்த தேர்தலில் பா.ஜனதா 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால், சமீப காலமாக பிரதமர் நரேந்திரமோடி எந்த கூட்டத்தில் பேசினாலும், பா.ஜனதா 370 இடங்களில் வெற்றிபெறும், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று கட்டியமிட்டு கூறிவருகிறார். அதே நம்பிக்கையில், மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் மக்களுக்கு அரசு சார்பில் என்னென்ன புதிய திட்டங்களை கொண்டுவருவது? என்பது குறித்தும் யோசிக்கத் தொடங்கிவிட்டார்.
சில நாட்களுக்கு முன்பு அனைத்து மத்திய மந்திரிகள், அரசுத்துறை செயலாளர்கள் கூட்டத்தை அவர் கூட்டியிருந்தார். 8 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் இந்தியாவின் வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்களை செயல்படுத்தவேண்டும்? என்பது குறித்து ஒரு மணி நேரம் மனம்விட்டு பேசினார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மந்திரியும் தங்கள் செயலாளருடன் இணைந்து தங்கள் அமைச்சகத்தில், 100 நாட்கள், 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் செயல் திட்டத்தை வரிசைப்படுத்தியதோடு, தொடர்ந்து 25 ஆண்டுகளில் என்னென்ன நீண்டகால திட்டங்களை மேற்கொள்ளலாம்? என்பதையும் எடுத்துக்கூறினர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக தொழில்நுட்பங்களை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடியில் ஒரு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கருத்து தெரிவித்தார். தேர்தலில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சி அமைத்தவுடன் ஆலோசனை செய்து திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பதிலாக, நிச்சயம் நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற உறுதியான நிலைப்பாட்டில், ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்? என்று பட்டியல் தயாரித்துவரும் பிரதமர் நரேந்திரமோடியின் உச்சகட்ட நம்பிக்கை, நாட்டு மக்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.