< Back
தலையங்கம்
இன்னொரு 26/11 வரக்கூடாது
தலையங்கம்

இன்னொரு 26/11 வரக்கூடாது

தினத்தந்தி
|
23 Aug 2022 12:28 AM IST

மும்பையில் பல குண்டு வெடிப்புகள் நடந்திருந்தாலும் இந்தியாவை ஏன் உலகையே குலை நடுங்கவைத்த 26/11 என்ற கொடூர சம்பவங்கள் ஒரு போதும் மறக்காது.

அந்த வேதனைகள் நினைவுகளில் இருந்து மறையவும் செய்யாது. 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை மும்பையில் 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இந்த குண்டு வெடிப்புகளெல்லாம் பாகிஸ்தானில் இருந்து வந்த 10 பயங்கரவாதிகளால்தான் அரங்கேறின. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இந்த தாக்குதல்தாரர்கள், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து நவீனரக தானியங்கி துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள் என ஏராளமான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு முதலில் ஒரு மீன்பிடி கப்பலை கடத்தி அதன் மூலமும், பிறகு ஒரு படகு மூலமும் வந்து மும்பையை அடைந்தனர்.

தெற்கு மும்பையில் மட்டும் 8 இடங்களில் குறிப்பாக சத்ரபதி சிவாஜி ரெயில் முனையம், ஓபராய் டிரைடண்ட் ஓட்டல், தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர் ஓட்டல், லியோபோல்ட் கபே, பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையான காமா மருத்துவமனை, நரிமன் இல்லம் என்று கூறப்படும் யூதர்கள் சமூகக்கூடம், மெட்ரோ சினிமா, டைம்ஸ் ஆப் இந்தியா கட்டிடத்தின் பின்னால் உள்ள ஒரு சந்து, செயிண்ட் சேவியர் கல்லூரி, மும்பை துறைமுக பகுதி மஜ்காவ் ஆகிய இடங்களிலும், வில்லே பார்லேயில் உள்ள ஒரு டாக்சியிலும் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகளை, அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தினர். இந்த கொடிய குண்டு வெடிப்புகளில் 20 பாதுகாப்பு படையினர், 26 வெளிநாட்டினர் உள்பட 175 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மும்பை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குறிப்பாக தேசிய பாதுகாப்பு படையினர், அதிரடிப்படையினர் போன்ற அனைத்து படையினரும் உயிரை துச்சமென மதித்து ஆற்றிய வீரதீர செயல்களாலும், அவர்களில் சிலரின் உயிர் தியாகத்தாலும் 10 பயங்கரவாதிகளில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

அஜ்மல் கசாப் என்ற ஒரு கொடியவன் கைது செய்யப்பட்டு, பின்பு நடந்த விசாரணைக்கு பிறகு தூக்கிலிடப்பட்டான். இனியும் இப்படி ஒரு கொடூரம் நடக்கக்கூடாது என்று சமுதாயம் நினைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், மும்பை போலீசின் ஒர்லி போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி எண்ணுக்கு பாகிஸ்தான் செல்போன் எண்ணில் இருந்து வந்த வாட்ஸ் அப் தகவலில், 'மும்பையில் மீண்டும் 26/11 பாணியில் தாக்குதல் நடத்துவோம். மும்பையை வெடித்து சிதற வைப்போம். 6 பேர் இந்த தாக்குதல்களை நடத்துவார்கள்', என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்த செய்தியில் 26/11 சதிகாரன் அஜ்மல் கசாப் பெயரும், அல் கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாகிரி பெயரும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி வந்ததற்கு சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து 190 கி.மீ. தூரத்தில் உள்ள ராய்கட் நகரில் உள்ள ஒரு கடற்கரையில் ஆளில்லாத ஒரு அதிவிரைவு படகு கரை ஒதுங்கியிருந்தது. அதில் மூன்று ஏ.கே.47 துப்பாக்கிகளும், குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. மும்பை போலீசார் இப்போது தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். 'சாகர் கவாச்' என்ற பெயரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 'வாட்ஸ்-அப்' செய்தியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மும்பை போலீசாரும், கடலோர காவல் படைகள், விமானப்படை என்று அனைத்து படைகளும் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். மத்திய-மாநில உளவுப்படைகள் களத்தில் தீவிரமாக இறங்க வேண்டும். மக்களுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. சந்தேகப்படும்படியாக யாராவது தென்பட்டாலோ, ஏதாவது பொருளை பார்த்தாலோ உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இனியும் ஒரு 26/11-ஐ நாடு பார்க்கக்கூடாது.

மேலும் செய்திகள்