தாவி குதித்து வந்துவிடக்கூடாது 'குரங்கு அம்மை'
|இந்தியாவில் ‘குரங்கு அம்மை’ நோயினால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், மிக எச்சரிக்கையாக இருக்கும்படி அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
கிராமப்புறங்களில், 'தலைவலி போய் திருகு வலி வந்தது போல' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அது இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பொருந்திவிடக்கூடாது என்ற ஒரு எதிர்பார்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவில் கேரளாவுக்குள்ளும், தமிழ்நாட்டுக்குள் மார்ச் மாதத்திலும் கொரோனா காலெடுத்து வைத்தது. கேரளாவுக்கு சீன நாட்டிலுள்ள உகான் நகரில் மருத்துவம் படித்து வந்த ஒரு மாணவியாலும், தமிழ்நாட்டுக்கு மஸ்கட் நாட்டில் பொறியாளராக பணியாற்றிய ஒருவராலும் கொரோனா நுழைந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கோரதாண்டவம் ஆடிய கொரோனா, ஏராளமான உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு, இப்போதுதான் தன் ஆட்டத்தை குறைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் நன்றாக குறைந்துவந்த கொரோனா, இப்போது சில கல்வி நிறுவனங்களில் வடஇந்திய மாணவர்களால் கொஞ்சம் பரவல் தொடங்கிவிட்டது. சென்னை, செங்கல்பட்டு போன்ற ஒரு சில மாவட்டங்களில்தான் கொரோனா தலையெடுத்துள்ளது. மற்ற மாவட்டங்களில் அடங்கிவிட்டது என்ற நிம்மதி இருக்கிறது. இந்த புதிய பாதிப்புகளால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. வந்த சுவடு தெரியாமல் போய்விடுகிறது. இந்தியா முழுவதுமே கொரோனாவை விரட்டி அடித்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ள நிலையில், உலகில் பல நாடுகளில் மெதுவாக தலையை தூக்கும் 'குரங்கு அம்மை' தாவிக்குதித்து நம் நாட்டுக்குள், குறிப்பாக தமிழ்நாட்டுக்குள் வந்துவிடக்கூடாது என்ற 'உஷார்' நிலை தொடங்கிவிட்டது. 'மங்கிபாக்ஸ்' என்று அழைக்கப்படும் 'குரங்கு அம்மை', இப்போது உலகம் சந்திக்கக்கூடிய முக்கியமான சவால்களுள் ஒன்றாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகில் முதலில் 1958-ம் ஆண்டு சோதனை நிலையங்களிலிருந்த குரங்குகளிடம் கண்டறியப்பட்டது இந்த அம்மை நோய். அதனால்தான் இது 'குரங்கு அம்மை' என்று அழைக்கப்படுகிறது. 1970-ம் ஆண்டுதான் முதன் முதலில் மனித குலத்தை தாக்கியது. காங்கோ நாட்டில் உள்ள 9 மாத கால குழந்தைக்குத்தான் இந்த குரங்கு அம்மை நோய் வந்தது. பின்னர், நைஜீரியா நாட்டில் பலருக்கு இந்த நோய் தாக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு அமைதியாக இருந்த 'குரங்கு அம்மை' 40 ஆண்டுகளுக்கு பிறகு தன் தலையைத்தூக்கி, தற்போது ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை நோக்கி தன் வீச்சுகளை தொடங்கி, 20 நாடுகளுக்கு மேலாக பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி கைவரிசையைக் காட்டிவிட்டது. காய்ச்சல், உடல் வலி, தலை வலி போன்றவை முதல் அறிகுறிகளாகவும், தொடர்ந்து 3 நாட்களுக்குள் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகளும், பின்பு கொப்புளங்களாக மாறும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் உயிர் பாதிப்பு இல்லையென்றாலும், இதனால் உடல்நிலை பெரிதும் சீர்கெடும். 'குரங்கு அம்மை' நோய் வராமல் தடுக்க பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை போடலாமா? என்பது குறித்து அமெரிக்கா, ஜெர்மனி, கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியாவில் 'குரங்கு அம்மை' நோயினால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், மிக எச்சரிக்கையாக இருக்கும்படி அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து பயணிகளையும் விமான நிலையங்களிலேயே தீவிர சோதனை நடத்த மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் ஆகியோர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிறு அறிகுறி இருந்தாலும் அவர்களுக்கு ரத்த பரிசோதனை, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை எடுத்து புனேவுக்கு அனுப்பவும், 21 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 'குரங்கு அம்மை' நோயை தமிழ்நாட்டுக்குள் நுழையவிட்டுவிடவே கூடாது. அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும். கொரோனாவால் பட்டபாடு போதும்.