இளமையும் அனுபவமும் கலந்த மோடி 3.0!
|பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபை நேற்று முன்தினம் பதவியேற்றது.
சென்னை,
2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்த பா.ஜனதாவுக்கு, இப்போது 3-வது முறையாக கூட்டணி கட்சிகளின் துணையோடுதான் ஆட்சியமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. மொத்தம் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை. ஆனால், பா.ஜனதாவுக்கு 240 இடங்களில்தான் வெற்றி கிடைத்தது. இதனால், கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 16 உறுப்பினர்கள், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 12 உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கூட்டணி கட்சிகளின் துணையோடு ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபையும் நேற்று முன்தினம் பதவியேற்றது. பிரதமரையும் சேர்த்து 72 பேர் கொண்ட இந்த மந்திரி சபை இளமையும் அனுபவமும் திறமையும் கொண்ட கலவையாக இருக்கிறது. இதில் 61 பேர் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். மீதி 11 பேர் கூட்டணி கட்சியினர். புதிய மந்திரி சபையில் 24 மாநிலங்களில் இருந்து 30 கேபினட் மந்திரிகள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 ராஜாங்க மந்திரிகள், 36 துணை மந்திரிகள் என 71 பேர் இடம் பெற்றுள்ளனர். அனைத்து சமுதாயத்துக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 27 மந்திரிகள் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையும், 10 பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தையும், 5 பேர் பழங்குடியின சமுதாயத்தையும், 5 பேர் சிறுபான்மை சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
கிறிஸ்தவ மதத்தவரான கேரளாவை சேர்ந்த 63 வயது ஜார்ஜ் குரியன் இணை மந்திரியாக இடம் பெற்றுள்ளார். இவர் இரு அவையிலும் உறுப்பினராக இல்லை. கேரளாவில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பா.ஜனதா முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. தொகுதியின் உறுப்பினரான மலையாள நடிகர் சுரேஷ் கோபி இணை மந்திரியாக பதவியேற்றுள்ளார். ஆனால், பதவி ஏற்பதற்கு முன்னும், பின்னும் தனக்கு மந்திரி பதவிவேண்டாம் என்று அவர் கூறிவருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை மறுத்துள்ள நடிகர் சுரேஷ் கோபி, 'நான் மந்திரி சபையில் இருந்து விலகுவதாக பரவிய தகவல் தவறானது. கேரள மக்களின் பிரதிநிதியாக பிரதமர் மோடி அரசின் மந்திரி சபையில் இடம் பெற்றிருப்பது பெருமை' என்று கூறியுள்ளார்.
கடந்த முறை பிரதமர் நரேந்திரமோடியின் மந்திரி சபையில் 6 பெண்கள் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த முறை 7 பெண்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் நிர்மலா சீதாராமனும், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அன்னபூரணா தேவியும் கேபினட் மந்திரிகளாவார்கள். கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு மந்திரி சபையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடுவுக்கு 36 வயதுதான் ஆகிறது. அவர்தான் மந்திரி சபையில் இளம் வயது மந்திரி என்ற பெருமைக்குரியவர்.
7 முன்னாள் முதல்-மந்திரிகள், 33 பேர் புது முகங்கள் என்று எல்லா வகையிலும் சிறப்பு பெற்ற இந்த மந்திரி சபையில், கர்நாடகாவில் இருந்து 5 பேரும், ஆந்திராவில் இருந்து 3 பேரும் தெலுங்கானா, கேரளாவில் இருந்து தலா 2 பேரும் இடம் பெற்றுள்ளனர். பா.ஜனதா கூட்டணியில் ஒருவர்கூட வெற்றி பெறாத தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் 2-வது முறையாக இணை மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இப்படி, எல்லா தரப்பையும் உள்ளடக்கிய புதிய மந்திரி சபையின் செயல்பாட்டை நாடே எதிர்பார்க்கிறது.