மணிப்பூர் மீண்டும் பற்றி எரிகிறது
|மணிப்பூர் மீண்டும் பற்றி எரிகிறது|Manipur is on fire again
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் நாட்டின் ஒரு பகுதி எல்லையாகும். மணிப்பூருக்கு அடுத்து மியான்மர் (பர்மா) நாடு இருக்கிறது. இரு பகுதியிலும் அமைதி இல்லாத ஒரு சூழல் தற்போது நிலவுகிறது. மியான்மரை இப்போது ராணுவம்தான் ஆட்சி செய்கிறது. அதிலும், இந்திய எல்லையை ஒட்டிய சில பகுதிகள், உள்ளூர் புரட்சி இயக்கமான மக்கள் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த படையினர் ஒரு ராணுவத்துக்கு இணையான நவீன ஆயுதங்களை கையில் வைத்திருக்கின்றனர். தாக்குதலுக்கு டிரோன், ராக்கெட் லாஞ்சர்களை பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவிலுள்ள சில பிரிவினை சக்திகள் இந்த பகுதியில் இருந்து கொண்டுதான் செயல்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இத்தகைய பின்னணியில், மணிப்பூரில் கடந்த 64 ஆண்டுகளாக, அதாவது 1960-ம் ஆண்டு முதல் தனி நாடாக பிரகடனப்படுத்தவேண்டும் என்று போராட்டம் நடந்துவருகிறது. இதன் விளைவாக மணிப்பூர் மாநிலத்தை மத்திய அரசாங்கம் பதற்றமான பகுதி என்று அறிவித்துள்ளது.
மலைகள், பள்ளத்தாக்குகளை கொண்ட அழகிய மாநிலம், மணிப்பூர். 'முகில்' படர்ந்த அங்கு இன்று 'திகில்' படர்ந்து கலவர பூமியாகவே காட்சியளிக்கிறது. பள்ளத்தாக்கில் மெய்தி இனத்தினரும், மலைப்பகுதியில் குகி என்ற மலைவாழ் மக்களும் வாழ்கிறார்கள். இருவருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். இதில், குகி இனத்தினரைவிட மெய்தி இனத்தினர் அதிகம் பேர் வாழ்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாகவே இரு இனத்தினருக்கும் மோதல் இருந்தாலும், கடந்த ஆண்டு மே மாதம் 27-ந்தேதி அந்த மாநில ஐகோர்ட்டு மெய்தி இனத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்ய மாநில அரசு பரிசீலிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல ஆகிவிட்டது. மலைவாழ் மக்களான குகி சமூகத்தினர், குறிப்பாக அந்த இனத்தை சேர்ந்த மாணவர்கள் இதை எதிர்த்து வீதிக்குவந்து போராடினர். வன்முறை வெடித்தது. ராணுவம் இறக்கப்பட்டது. அப்படி இருந்தும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கும் தீப்பற்றி எரிந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் மரணம் அடைந்தனர். இந்த நிலையில், இப்போது மெய்தி இனத்தை சேர்ந்த மாணவர்களும், கலவரத்தை சரியாக கையாளாததால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறி, அதற்கு பொறுப்பேற்று மாநில பாதுகாப்பு ஆலோசகரையும், போலீஸ் டி.ஜி.பி.யையும் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று போராடுகிறார்கள்.
தார்மீக அடிப்படையில் எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகவேண்டும் என்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதுடன் துப்பாக்கி சூடும் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக வன்முறை வெடித்தது. மெய்தி இனத்தவருக்கும், குகி இனத்தவருக்கும் பழையபடி தகராறு ஏற்பட்டது. குகி இனத்தவர் டிரோன்களையும், ராக்கெட் லாஞ்சர்களையும் பயன்படுத்தினர். இவையெல்லாம் அண்டை நாடான மியான்மரிலுள்ள மக்கள் பாதுகாப்பு படையிடம் வாங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மணிப்பூரை அப்படியே விட்டுவிடமுடியாது.
ஏற்கனவே, மோதலில் ஈடுபட்டுள்ள ரஷியா-உக்ரைன் நாடுகளை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண உலக நாடுகள் கோரிவரும் நிலையில், இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி-குகி இன மக்களும் அகிம்சை வழியில் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக அமைதியை விரும்பும் ஜனநாயக நாடான இந்தியாவில், டிரோன், ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் போன்றவை எப்போதும் தலைதூக்கவே கூடாது.