மத்திய அரசாங்க தேர்வில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடு
|தமிழ்நாட்டில் இப்போது கட்டிட வேலையில் தொடங்கி விவசாய வேலைகள் வரை, அனைத்து கூலி வேலைகளிலும் வட மாநிலத்தவர் புகுந்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் இப்போது கட்டிட வேலையில் தொடங்கி விவசாய வேலைகள் வரை, அனைத்து கூலி வேலைகளிலும் வட மாநிலத்தவர் புகுந்துவிட்டனர். எனவே, தமிழகத்தை சேர்ந்த தொழிலாளிகள், குறிப்பாக இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இப்போது தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசாங்க பணிகள், குறிப்பாக ரெயில்வே, தபால்துறை போன்ற அனைத்து துறை பணிகளிலும், வடமாநிலத்தவர்களே அதிகமாக பணிபுரிவதைப் பார்க்க முடிகிறது.
குறிப்பாக 4-வது பிரிவு என்று கூறப்படும் கடைநிலை பணிகளில்கூட, தமிழக இளைஞர்களைக் காண முடிவதில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய தபால் துறை கடைநிலை பணிகளில்கூட தமிழ் தெரியாத வட மாநிலத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த தேர்வுகளையெல்லாம் தமிழக இளைஞர்கள் எழுதினாலும் நிறைய பேர் தேர்வாகவில்லை. இந்த தேர்வுகளில் எல்லாம் வட மாநிலத்தவரே அதிகம் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து, சமீப காலமாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்களிடம், குறிப்பாக இத்தகைய தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஏதோ 'தில்லு முல்லு' நடக்கிறதோ என்று சந்தேகப்பட்டனர்.
அதை உறுதிப்படுத்தும் வகையில், சுங்க இலாகாவிலுள்ள எழுத்தர், கேண்டீன் உதவியாளர், கார் டிரைவர்கள் போன்ற பணிகளுக்கு சென்னை சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த எழுத்துத் தேர்வின்போது, ஒரு பெரிய முறைகேட்டை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரங்கேற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 17 பணிகளுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், 200 பேர் எழுத்துத் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வு எழுதிக்கொண்டு இருந்தபோது, ஒருவரின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமான வகையில் இருப்பதைப் பார்த்த தேர்வு கண்காணிப்பு அதிகாரி அவரை சோதனையிட்டார்.
தேர்வு எழுதியவரின் காதில் மிகச்சிறிய அளவிலான 'புளூடூத்' கருவியும், அவரது இடுப்பில் 'பிராட்பேண்ட்' கருவியும் இருப்பதை கண்டுபிடித்தார். தொடர்ந்து அனைவரையும் தீவிரமாக சோதனை போட்டதில், 30 பேர் இதேபோல 'தில்லாலங்கடி' வேலையை செய்திருப்பதும், வெளியே இருந்து அவர்களுக்கு இந்த 'புளூடூத்' மூலமாக தேர்வு தாளில் இருந்த கேள்விகளுக்கு சரியான பதிலை கூறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிக்கொண்டு இருந்தார். இந்த 30 பேரில் 26 பேர் அரியானாவையும், தலா 2 பேர் உத்தரபிரதேசம், பீகாரை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கன்னியாகுமரியை சேர்ந்த அந்த அதிகாரி மட்டும் கண்டுபிடிக்காவிட்டால், இந்த 30 பேரில் இருந்தே அத்தனை வேலைகளுக்கும் ஆட்கள் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பார்கள். தமிழக இளைஞர் ஒருவருக்கும் இந்த வேலை கிடைத்திருக்காது.
இனி மத்திய அரசாங்க தேர்வுகள் நடக்கும்போது கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும். இதுபோல, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் முறைகேடுகளை கண்டுபிடிக்கும் சாதனங்களை பயன்படுத்தவேண்டும். தேர்வு கண்காணிப்பு அதிகாரிகளும் மிகவும் விழிப்புடன் பணியாற்றவேண்டும். மிக முக்கிய தலைவர்கள் வரும்போது, செல்போன் பயன்படுத்த முடியாதவாறு 'ஜாமர்கள்' பயன்படுத்தப்படுகிறதோ, அதுபோல தேர்வு மையங்களில் இப்போது பயன்படுத்தப்பட்ட 'புளூடூத்' போன்ற சாதனங்கள் செயலிழக்கும் கருவிகள் பொருத்தப்படவேண்டும். மொத்தத்தில், மத்திய அரசாங்க பணிகளுக்கான தேர்வுகளில், இதுபோன்ற முறைகேடுகளுக்கு இடம் அளிக்காமல், யார் நன்றாக தேர்வு எழுதுகிறார்களோ அவர்களுக்கே அந்த பணி கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.