தொழிற்சாலைகளை கொண்டு வரட்டும் இந்த சிறப்பு குழு!
|தமிழ்நாட்டில் மின்னணு ஏற்றுமதி 7.37 பில்லியன் டாலராக உயர்ந்து, இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
"தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றிக்காட்டுவேன்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து, அந்த இலக்கை நோக்கி வேகமாக சென்று வருகிறார். இதற்கு தொழில் வளர்ச்சி மிக மிக இன்றியமையாதது. அவரது முயற்சியின் விளைவாக மின்னணு தொழில்களும், மோட்டார் வாகன தொழில்களும் தமிழ்நாட்டில் ஏராளமாக தொடங்குவதற்காக அணிவகுத்து நிற்கின்றன.
தமிழ்நாட்டில் மின்னணு ஏற்றுமதி 7.37 பில்லியன் டாலராக உயர்ந்து, இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மின்னணு தொழிலில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியே 22.65 பில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கும்போது, தமிழ்நாட்டின் ஏற்றுமதி இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 32.52 சதவீதமாகும். இந்த மாதத்துக்குள் தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதியை 9 பில்லியன் டாலராக மேலும் உயர்த்தி புதிய சாதனையை படைக்க தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. மின்னணு தொழில் ஏற்றுமதியில் தமிழ்நாடு காட்டும் வேகத்தைப்பார்த்தால், விரைவில் நாட்டின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 50 சதவீதத்தை அடைந்துவிடும் என்பது உறுதி.
இதுபோல, மோட்டார் வாகன தொழிலும் குறிப்பாக, மின்வாகன உற்பத்தி தொழிலும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மோட்டார் வாகன தொழிலின் கேந்திரமாக தமிழ்நாடு விளங்குகிறது. எதிர்காலம் மின் வாகனத்திடம்தான் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். பல மின்வாகன தொழிற்சாலைகள் புதிது புதிதாக தொடங்கப்பட்டு வருகின்றன. ஓசூரிலுள்ள ஒரு மின்வாகன தொழிற்சாலையில் முழுக்க முழுக்க பெண்களே பணிபுரிந்து வருவது, ஒட்டுமொத்த இந்தியாவையே ஆச்சரியத்துடன் பார்க்க வைக்கிறது. உள்நாட்டிலிருந்து மட்டுமல்ல, வெளிநாட்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை தொடங்க நாடி வருகிறார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு சென்று, அங்கு வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தொடங்க இருக்கும் மின்வாகன தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் 3,500 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலை இது. கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 50 நாட்களில் அடிக்கல் நாட்டப்படுவது மிகப்பெரிய சாதனையாகும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீட்டில், 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
அந்த மாநாட்டின் இறுதி நாளில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும். அந்த குழு ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தொடர்ந்து கண்காணித்து, அதை ஒரு முழுமையான தொழிற்சாலையாக மாற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்கும்" என்று கூறியதற்கு ஏற்ப, உடனடியாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் 16 உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவும் உடனடியாக தன் பணியை தொடங்கிவிட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டும் போதாது, வின்பாஸ்ட் போல டெஸ்லா உள்பட பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை தொடங்கவும் முன்வரவேண்டும். அந்த வகையில், இந்த சிறப்பு குழு அமைக்கப்பட்டதும், அந்த குழு தன் பணிகளை தொடங்கியதும் பாராட்டத்தக்கது. 631 ஒப்பந்தங்களில் பெரும்பாலானவற்றை செயலாக்கத்துக்கு கொண்டுவந்தால், மிகப்பெரிய தொழில் புரட்சி தமிழ்நாட்டில் ஏற்படும்.