< Back
தலையங்கம்
4 நாட்கள் போர் நிறுத்தம் நாளெல்லாம் தொடரட்டும்!
தலையங்கம்

4 நாட்கள் போர் நிறுத்தம் நாளெல்லாம் தொடரட்டும்!

தினத்தந்தி
|
25 Nov 2023 1:53 AM IST

ஒரு இரும்பு வேலி மட்டுமே பிரிக்கும் இஸ்ரேல்-காசா இடையே நடக்கும் போர், உலக மக்களையே கவலைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு இரும்பு வேலி மட்டுமே பிரிக்கும் இஸ்ரேல்-காசா இடையே நடக்கும் போர், உலக மக்களையே கவலைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து இருந்த நிலையில், 2005-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியது. அதற்கு பிறகு காசாவின் ஆட்சியை ஹமாஸ் என்ற போராளி குழு கைப்பற்றியது. அன்று முதல் தொடர்ந்து ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே ஆயுத மோதல் நடந்துவருகிறது. இதற்கு முடிவே கிடையாதா? என்று உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதலை தொடுத்தனர். 20 நிமிடங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

பெண்கள், சிறுவர்கள் உள்பட 240 பேரை ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு சென்றுவிட்டனர். அவ்வளவுதான், இஸ்ரேல் வீறுகொண்ட வேங்கைபோல காசா மீது சீறிப் பாய்ந்தது. காசாவை தரை மட்டமாக்கும் முயற்சியில் குண்டு மாரி பொழிந்தது. எங்கும் மரண ஓலம் கேட்டது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். 2,700 பேரைக் காணவில்லை.

உலக நாடுகளே இதற்கு ஒரு முடிவு வராதா? என்று ஏங்கிய நிலையில், ஐ.நா. சபையில் மனிதாபிமான அடிப்படையில், உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் நிறைவேறியது. இஸ்ரேல் மீது காசா நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு, பாலஸ்தீன மக்களுக்காக இந்தியா மருந்துகள் மற்றும் பல்வேறு உபகரணங்களை அனுப்பியது. இத்தகைய சூழ்நிலையில், இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால், தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கத்தயார் என்று ஹமாஸ் அறிவித்தது. இதற்கு பின்புலமாக கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி, அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், எகிப்து அரசாங்கம் எடுத்த ரகசிய பேச்சு வார்த்தைகளே காரணமாக இருந்தது.

போரை நிறுத்துவதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவிடம் அமெரிக்க ஜனாதிபதியும், ஹமாஸ் எகிப்து உளவு பிரிவினரும் நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக, இருதரப்பும் 4 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டன. இதில் கத்தார் மன்னர் எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியது. இதன்படி, நேற்று இந்த 4 நாட்கள் போர் நிறுத்தம் தொடங்கியது. ஹமாஸ் தன்னிடம் உள்ள 240 பிணைக் கைதிகளில் 50 பேரையும், இஸ்ரேல் அதற்கு பதிலாக தன்னிடம் உள்ள 7 ஆயிரத்து 200 பாலஸ்தீன கைதிகளில் 150 பேரையும் விடுவிப்பதாக அறிவித்துள்ளது. இருதரப்பும் பெண்களையும், குழந்தைகளையும் முதலில் விடுவிக்கின்றன. இந்த 4 நாட்களும் போர் எதுவும் இருக்காது. காசாவுக்குள் மருந்து மற்றும் எரிபொருள் ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்கள் தாராளமாக செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4 நாட்கள் நிறுத்தப்படும் இந்த போர், ஏன் இது நாளெல்லாம் தொடரக்கூடாது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு முயற்சி செய்த கத்தார் மன்னர், எகிப்து அரசாங்கம், அமெரிக்க ஜனாதிபதி ஆகியோர், நிரந்தர போர் நிறுத்தத்துக்கு முயற்சி செய்யவேண்டும் என்றும், இரு நாட்டு மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்காக இஸ்ரேலும், காசாவும் சற்று இறங்கிவந்து சமாதான பேச்சு வார்த்தைக்கு ஒத்துழைக்கவேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்