< Back
தலையங்கம்
சர்வதேச சுற்றுலா தலமாக மாறப்போகும் லட்சத்தீவுகள்!
தலையங்கம்

சர்வதேச சுற்றுலா தலமாக மாறப்போகும் லட்சத்தீவுகள்!

தினத்தந்தி
|
26 Jan 2024 1:49 AM IST

பிரதமர் நரேந்திரமோடி உலகம் முழுவதும் ஒரு புகழ்மிக்க, பிரபலமான தலைவராக விளங்குகிறார். அவர் செல்லும் இடங்களெல்லாம் சிறப்பு பெறுகிறது.

பிரதமர் நரேந்திரமோடி உலகம் முழுவதும் ஒரு புகழ்மிக்க, பிரபலமான தலைவராக விளங்குகிறார். அவர் செல்லும் இடங்களெல்லாம் சிறப்பு பெறுகிறது. சமீபத்தில் அவர் 2 நாட்கள் அரபிக் கடலில் உள்ள லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் கடற்கரையில் நடைபயிற்சி செய்தார். டீ குடித்தார். பாதுகாப்பு உடையில் கடலுக்குள் மூழ்கி 'சுநோர்கெலிங்' என்னும் சாகச பொழுதுபோக்கில் ஈடுபட்டார். கடற்கரையில் நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுத்தார். இந்த தீவு கூட்டங்களின் அழகை புகைப்படமாகவும், வீடியோக்களாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், "சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்" என்றும் கூறியிருந்தார்.

அவ்வளவுதான், கூகுளில் அதிகம் தேடப்படும் இடமாக லட்சத்தீவு மாறியது. லட்சத்தீவு எங்கு இருக்கிறது?, அங்கு செல்ல எங்கெங்கிருந்து விமான சேவை இருக்கிறது?, கப்பல் அல்லது படகு மூலம் செல்ல முடியுமா?, அங்கு நட்சத்திர ஓட்டல்கள் இருக்கிறதா? என்றெல்லாம் தேடி வருகிறார்கள். நரேந்திரமோடி வருகையால், ஒரே நாளில் லட்சத்தீவுக்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைத்துவிட்டது. இந்த ஒரு சமூக வலைதள பதிவினால், ஏற்கனவே இந்தியா உடனான உறவில் சற்று விரிசல் கண்ட மாலத்தீவின் துணை மந்திரிகள் மரியம் ஷியுனா, அப்துல்லா ககசூம், மால்ஷா ஷெரீப் ஆகியோர், பிரதமர் நரேந்திரமோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டனர். "மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்ற பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்" என்று குற்றஞ்சாட்டினர்.

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததை எதிர்க்கும் வகையில், மாலத்தீவுக்கு சுற்றுலா மேற்கொள்ள திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். ஒரே நாளில் 7,500 ஓட்டல் முன்பதிவு, 2,300 விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதை மாலத்தீவு அரசாங்கம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த மந்திரிகளின் கருத்துக்கும், மாலத்தீவு அரசாங்கத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவை அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று விளக்கம் சொன்னதோடு, அந்த 3 மந்திரிகளின் பதவியும் தற்காலிகமாக பறிக்கப்பட்டது.

மாலத்தீவு சுற்றுலா தொழிலையே பிரதானமாக நம்பி வாழும் நாடாகும். கடந்த ஆண்டு மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் பட்டியலில் இந்தியர்கள்தான் முதலிடம் வகித்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை அவதூறாக அந்த நாட்டு மந்திரிகள் பேசியதால், இப்போது பெரிய பொருளாதார சரிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

லட்சத்தீவு கூட்டத்தில் 33 தீவுகள் இருக்கின்றன. இயற்கை அழகு கொஞ்சும் இதன் எழிலை பிரதமர் வர்ணித்ததில் இருந்து, உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல நட்சத்திர ஓட்டல் குழுமங்கள் அங்கு ஓட்டல்களை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளன. இப்போது, கொச்சியில் இருந்து லட்சத்தீவிலுள்ள அகட்டி தீவுக்கு மட்டும் விமான சேவை இருக்கிறது. அங்கு ஓடுபாதையை விரிவாக்கம் செய்யவும், மினிக்காய் தீவில் பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில், பிரமாண்ட விமான நிலையத்தை உருவாக்கவும் மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தியர்களுக்கு அங்கு செல்ல விசாவும் தேவையில்லை என்பதால், பயண திட்டத்தை எளிதாக வகுக்க முடியும். பயணச் செலவும் குறைவு. மொத்தத்தில் யார் பார்வையிலும் அதிகம் படாமல் இருந்த லட்சத்தீவு, மோடியின் வருகை மற்றும் அவரது சமூக வலைதள பதிவால் சர்வதேச சுற்றுலா தலமாகப்போகிறது.

மேலும் செய்திகள்