< Back
தலையங்கம்
மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பாராட்டு
தலையங்கம்

மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பாராட்டு

தினத்தந்தி
|
9 Feb 2024 5:28 AM IST

தங்களின் வாழ்வாதாரமாகிய படகுகளை லாரிகள், டிரக்குகளில் எடுத்துக்கொண்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு வந்து மீட்பு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை கடந்த டிசம்பர் மாதம் பெய்தது. 3, 4-ந்தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் பெருமழை பெய்தது. இதுபோல 17, 18-ந்தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பெய்த மிகப்பெரிய கனமழையால் எல்லா இடங்களும் கடல்போல காட்சியளித்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது மட்டுமல்லாமல், வீதிகளிலும் தண்ணீர் வெள்ளமென பாய்ந்து ஓடியது. ஏராளமான வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. பல வீடுகளை தண்ணீர் மூழ்கடித்ததால், பொருட்களெல்லாம் சேதமடைந்தன.

இந்த நேரத்தில், மக்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டுமென்றாலும் சரி, அவர்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொடுக்க வேண்டுமென்றாலும் சரி, அரசு வழங்கும் நிவாரண பொருட்களைக் கொண்டுபோய் கொடுக்க வேண்டுமென்றாலும் சரி, மோட்டார் வாகனங்கள் உள்ளே போக முடியவில்லை. இந்த பணிகளுக்கும் சரி, மீட்பு பணிகளில் ஈடுபட்ட போலீஸ், தீயணைக்கும் படை, ராணுவத்தினர் கூட அங்கு படகுகள் மூலமாகத்தான் செல்ல முடியும் என்றநிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், ஆபத்பாந்தவர்களாக மீனவர்கள்தான் ஓடோடி வந்தனர். தங்களின் வாழ்வாதாரமாகிய படகுகளை லாரிகள், டிரக்குகளில் எடுத்துக்கொண்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர்கள் கூட அவர்களின் படகுகளில்தான் சென்றனர். தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டு இருந்த ஏராளமான மக்களை படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பாக கொண்டுபோய் முகாம்களில் சேர்க்க அவர்களின் படகுகள்தான் உதவின. பலருடைய உயிரையும் மீனவர்களின் இந்தத் தியாக செயல்தான் காப்பாற்றியது. தங்களது பிழைப்புக்காக கடலுக்கு மீன் பிடிக்க படகுகளில் செல்வதைவிட, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதியுற்றுக்கொண்டு இருக்கும் மக்களை காப்பாற்றுவதுதான் முதல் கடமை என்று பல நாட்கள் மீட்பு பணியில் இருந்த 850 மீனவர்களுக்கு தூத்துக்குடியில் பாராட்டு விழா நடந்தது.

தமிழக அரசின் சார்பில் நடந்த இந்த விழாவில், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்ட அந்த தியாக சீலர்களுக்கு விருந்தளித்து, அவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது கையில் எடுத்து செல்லக்கூடிய புளூடூத்துடன் கூடிய எப்.எம். ரேடியோவும், பாராட்டு சான்றிதழும் வழங்கினர்.

சென்னையில் நடந்த பாராட்டு விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1,200 மீனவர்களுக்கு மிக்சி, வேட்டி - சேலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இது தமிழக அரசின் மீன் வளத்துறையின் பாராட்டு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் தங்கள் உறவுகளான மீனவர் சமுதாயத்துக்கு அளிக்கும் பாராட்டு மட்டுமல்ல, நன்றிக்கடன். அதை நிரூபிக்கும் விதமாகத்தான் சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்செந்தூர் தாலுகா தண்ணீர் பந்தல் கிராமத்தில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த 250 பேரையும், அங்குள்ள உப்பளத்தில் சிக்கித் தவித்த 13 பேரையும், 16 மீனவர்களை அழைத்துக்கொண்டு படகில் சென்று கடும் போராட்டத்துக்கிடையே மீட்டு வந்த காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த மீனவர் யாசர் அராபத்தின் துணிச்சலான செயலைப் பாராட்டி அண்ணா விருது வழங்கி கவுரவித்தார். இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மீனவ நண்பர்களை தமிழ்ச் சமுதாயம் மறக்காது. என்றென்றும் நினைவில் வைத்து நன்றி பாராட்டும்.

மேலும் செய்திகள்