< Back
தலையங்கம்
காசி தமிழ் சங்கமம்-2023
தலையங்கம்

காசி தமிழ் சங்கமம்-2023

தினத்தந்தி
|
26 Dec 2023 1:11 AM IST

உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட கலாசார மற்றும் வரலாற்று தொடர்பு உண்டு.

உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட கலாசார மற்றும் வரலாற்று தொடர்பு உண்டு. வாழ்நாளில் ஒரு முறையாவது காசிக்கு சென்று கங்கையில் புனித நீராடினால், செய்த பாவங்கள் கரைந்துபோகும் என்ற நம்பிக்கை இந்துக்களுக்கு உண்டு. தமிழ்நாட்டில் தென்காசி, சிவகாசி என்று பல ஊர்களின் பெயர்கள் காசியின் பெயரை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. கி.பி. 15-ம் நூற்றாண்டில், தென்காசியை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த மன்னர் பராக்கிரம பாண்டியன் இங்கு இருந்து நீண்ட பயணம் செய்து, காசிக்கு செல்லமுடியாத தமிழக மக்களுக்காக தென்காசியில் உலகம்மன் காசிவிசுவநாத சாமி கோவிலை கட்டினார். அங்குள்ள கல்வெட்டில் அவர், "யாராயினும் இந்த தென்காசி மேவும் பொன் ஆலயத்து வாராததோர் குற்றம் வந்தால், அப்போது அங்கு வந்ததனை நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன் பாரோர் அறிய பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே" என்று பொறித்து வைத்திருந்தார். அந்த கல்வெட்டு இன்றும் தென்காசி கோவிலில் இருப்பதை காணலாம்.

மன்னர் பராக்கிரமபாண்டியன் கூறியதுபோல, 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோவிலின் கோபுரம் ஒரு தீ விபத்தில் சிதைந்தது. மொட்டைக்கோபுரமாக பல ஆண்டுகள் காட்சியளித்த நிலையில், எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது 1981-ல், தினத்தந்தி அதிபர் மறைந்த டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் தலைமையில் திருப்பணி குழு அமைக்கப்பட்டு, அவருடைய சீரிய முயற்சியாலும், பங்களிப்பாலும் 9 நிலைகளுடன் 178 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டப்பட்டு 25-6-1990 அன்று குடமுழுக்கு நடத்தப்பட்டது. அந்த அளவுக்கு காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பை வலுப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, "காசியும், தமிழகமும் காலத்தால் அழியாத நமது கலாசாரம், நாகரிகத்தின் மையங்கள். தமிழின் பாரம்பரியத்தை பாதுகாத்து வளப்படுத்துவது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு" என்று பேசினார்.

இப்போது மீண்டும் "காசி தமிழ் சங்கமம் 2023" தொடங்கப்பட்டு சீரும் சிறப்புமாக நடக்கிறது. இந்த நிகழ்ச்சியையும் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்து, கன்னியாகுமரி-வாரணாசி தமிழ் சங்கமம் ரெயிலை கொடியசைத்து பயணத்தை தொடங்கிவைத்தார். அப்போது அவர், "தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு வருவது மகாதேவரின் ஒரு இருப்பிடத்தில் இருந்து மற்றொரு இருப்பிடத்துக்கு வருவது போலாகும்" என்றார். திருக்குறள், மணிமேகலை மற்றும் பிற உன்னதமான தமிழிலக்கியங்களின் பல மொழி பெயர்ப்புகளையும், பிரெய்லி முறையிலான அந்த இலக்கியங்களின் நூல்களையும் வெளியிட்டார்.

மாணவர்கள்- ஆசிரியர்கள், தொழில் வல்லுனர்கள், ஆன்மிகவாதிகள், விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள், எழுத்தாளர்கள், வர்த்தகர்கள் என்று பல குழுக்களாக தமிழ்நாட்டில் இருந்து காசி தமிழ் சங்கமம் 2023-க்கு சென்று கொண்டிருக்கிறார்கள். காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள பாரம்பரிய பிணைப்பை புதுப்பிப்பதற்கும், இரு பிராந்தியங்களை சேர்ந்த மக்களின் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவும் என்ற வகையில், இது மிகவும் வரவேற்புக்குரியது. ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சிகளை காசியில் நடத்துவதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் நடத்தவேண்டும். அப்போதுதான் அங்குள்ள மக்களுக்கும், தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டை அறிந்துகொள்ள முடியும். காசி போல, வேறு எந்த பகுதிகளோடும் தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பதையும் ஆராய்ந்து அங்கும் விழா எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்