< Back
தலையங்கம்
kalaignar bought This right!
தலையங்கம்

இது கலைஞர் பெற்றுத்தந்த உரிமை !

தினத்தந்தி
|
24 Aug 2024 6:16 AM IST

ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதியாகும்.

சென்னை,

ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதியாகும். இந்த நாளைப்பற்றி மறைந்த அறிஞர் அண்ணா குறிப்பிடும்போது, "1947 ஆகஸ்டு 15 அந்நிய ஆதிக்கத்துக்கு கணக்கு தீர்த்த நாள்" என்றும், "ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிற ஆகஸ்டு 15 சுதந்திரத்தின் பயன்களை கணக்கு பார்க்கிற நாள்" என்றும் அழகுபட கூறினார். அதுபோல, இந்தியா குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதியாகும். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினம் என்றும், ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தினம் என்றும் கொண்டாடுகிறோம்.

சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் தேசியக்கொடியேற்றி வைத்து ஆற்றும் உரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுபோல, மாநில தலைநகரங்களில் 1974-ம் ஆண்டு வரை சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் இருந்து மாநில கவர்னர்களே தேசியக்கொடியை ஏற்றி வந்தனர். இதுபோல, குடியரசு தினத்தன்றும் தேசியக்கொடியை இன்றுவரை கவர்னர்களே ஏற்றி வருகிறார்கள். டெல்லியில் குடியரசு தினத்தன்று ஜனாதிபதி கொடியேற்றுகிறார். "டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றிவைக்கும் உரிமை இருக்கும்போது, மாநிலங்களில் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர்களுக்கு அந்த உரிமையில்லாமல் கவர்னர்களே தேசிய கொடியை ஏற்றுவதா?" என்று அப்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, இந்த பிரச்சினையை கையில் எடுத்தார். அவர் இந்த உரிமையை தனக்காக, அதாவது தமிழ்நாட்டுக்காக மட்டும் கேட்கவில்லை. அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் சேர்த்தே கேட்டார்.

மாநில சுயாட்சி பற்றி பேசும் கலைஞர் கருணாநிதி, அதை செயலிலும் நிரூபிக்கும் வகையில், 1974-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, "குடியரசு தினத்தன்று டெல்லியில் ஜனாதிபதியும், சுதந்திர தினத்தன்று பிரதமரும் தேசியக்கொடி ஏற்றும்போது, இந்த சலுகையைக்கூட மாநில முதல்வர்கள் அனுபவிக்கவில்லை" என்று பேசினார். தொடர்ந்து மத்திய அரசாங்கத்துக்கு அவர் விடுத்த கோரிக்கையால் 1974-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி, "மாநில முதல்-அமைச்சர்களை தேசியக்கொடியேற்ற அனுமதிக்க வேண்டும்" என்ற தமிழ்நாடு அரசின் பரிந்துரையை மத்திய அரசாங்கம் ஏற்று, அந்த ஆண்டு முதல் மாநில தலைநகரங்களில் சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக்கொடியை ஏற்றுவார்கள் என்று அறிவித்தது.

கலைஞர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை, எழுப்பிய உரிமை குரலை அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டதும் சிறப்புக்குரியது. அந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் கருணாநிதி முதல் முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் கலைஞரின் முயற்சியின் பலனால் தேசியக்கொடியை ஏற்றி வைக்கும் உரிமையை பெற்றார்கள். இந்த உரிமையை பெற்று இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. மாநில முதல்-அமைச்சர்களுக்கு கொடியேற்றும் உரிமை கிடைத்து இது பொன்விழா ஆண்டாகிறது. இந்த உரிமையை பெற்று முதல் ஆண்டில் கலைஞர் கருணாநிதியும், பொன் விழா ஆண்டில் அவர் மகன் மு.க.ஸ்டாலினும் தேசியக்கொடியை ஏற்றி வைத்தது வரலாற்றில் முத்திரை பதிக்கும் நிகழ்வாகும்.

மேலும் செய்திகள்