துள்ளி வரட்டும் வேலைவாய்ப்புகள் !
|ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சியை அங்கு உருவாகிவரும் வேலைவாய்ப்புகளைக் கொண்டு அளவிட்டு விடலாம்.
ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சியை அங்கு உருவாகிவரும் வேலைவாய்ப்புகளைக் கொண்டு அளவிட்டு விடலாம். அந்த வகையில், இந்த ஆண்டு 10 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிட வேண்டும் என்ற குறிக்கோளில் பிரதமர் நரேந்திர மோடி, 'ரோஜ்கர் மேளா' என்ற பெயரில் வேலை வாய்ப்பு திருவிழாக்களை நாடு முழுவதும் மாதந்தோறும் நடத்தி, மத்திய அரசாங்கம் மற்றும் ராணுவ பணிகள், மத்திய போலீஸ் போன்ற பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கி வருகிறார்.
மாநிலங்களில் மத்திய மந்திரிகள் இந்த பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார்கள். நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி 51,157 பேர்களுக்கு காணொலி காட்சி மூலம் பல்வேறு பணிகளுக்கான உத்தரவை வழங்கினார். தமிழ்நாட்டிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. என்ஜினீயரிங் மற்றும் கலைக்கல்லூரிகளில் படித்து முடித்தவர்களுக்கு ஐ.டி. நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அவர்களின் குடும்பங்களும் வளம் பெறுகின்றன.
சமீபத்தில் இந்திய வர்த்தக சபை கூட்டமைப்பு, 'நாளைக்கான தொழில்நுட்பம்' என்ற பெயரில் நடந்த மாநாட்டில், தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, "தற்போது தமிழ்நாட்டில் ஐ.டி. தொழில் பிரிவில் மட்டும் மாதந்தோறும் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கூடுதலாக உருவாக்கப்படுகின்றன. மாதம் 25 ஆயிரம் பேர்களுக்கு இந்த துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு" என்று கூறியது, இளைய சமுதாயத்தினருக்கு பெரும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை 15 சதவீத பங்களிப்பை நல்குகிறது. முதல்-அமைச்சரின் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி மிகவும் இன்றியமையாததாகும் என்று, தமிழ்நாடு மின்னணு கழக செயல் இயக்குனர் எஸ்.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் பல பெரிய, சிறிய நகரங்களில் ஐ.டி. பூங்காக்களை உருவாக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் அந்தந்த பகுதிகளில் படித்து முடித்த இளைஞர்கள் உள்ளூரிலேயே வேலை வாய்ப்பு பெறப்போகும் நல்ல நாள் வெகு தூரத்தில் இல்லை. இதுதவிர, தமிழக அரசு பணிகளிலும் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்ற விவரங்கள் திரட்டப்பட்டு, கடந்த மாதம் 27-ந்தேதி அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசு பணிகளுக்கான தேர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்தான் நடத்தப்படுகிறது.
அனைத்து துறை செயலாளர்களும் தங்கள் துறையில் குரூப் 2, குரூப் 2 ஏ, மற்றும் குரூப் 4 பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய பட்டியலை தேர்வாணையத்துக்கு அனுப்பியுள்ளனர். இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக அடுத்த ஆண்டு நடக்கப்போகும் தேர்வுகளுக்கான வருடாந்திர பட்டியல் டிசம்பர் 2-வது வாரத்தில் வெளியிடப்பட இருக்கிறது. ஆக, வரப்போகும் 2024-ம் ஆண்டு தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வாரி வாரி வழங்கப்போகும் ஒளிமிகுந்த ஆண்டாக இருக்கப்போகிறது. அரசு பணிகள் மட்டுமல்லாமல், நிறைய வேலைவாய்ப்புகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட அரசு ஊக்கமும், சலுகைகளும், மானியமும் அளிக்க வேண்டும்.