மறுமலர்ச்சி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!
|தமிழர்களுக்கென்று தலைசிறந்த கலாசாரம் உண்டு. நன்றி உணர்ச்சி மிகுந்தவர்கள்.
தமிழர்களுக்கென்று தலைசிறந்த கலாசாரம் உண்டு. நன்றி உணர்ச்சி மிகுந்தவர்கள். அதனால்தான் தங்களுக்கு வாழ்வளிக்கும் சூரியன் போன்ற இயற்கைக்கும், விவசாயத்தில் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும் தனியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். பொங்கலை 3 நாட்கள் கொண்டாடும் தமிழர்கள், முதல் நாளில் தாங்கள் விளைவித்த நெல்லைக்கொண்டு பொங்கலிட்டு மகிழ்வார்கள். இரண்டாம் நாள் தங்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவித்து பொங்கலிட்டு கொண்டாடுவார்கள். 3-ம் நாள் காணும் பொங்கல். தன் உற்றார் உறவினர்களோடு வெளியிடங்களுக்கு சென்று ஆனந்தமாக பொழுதை கழிப்பார்கள். இது உறவுகளை வலுப்படுத்தும் நாள்.
தமிழர்கள் வீரர்கள். அதனால்தான், பொங்கலையொட்டி பல வீர விளையாட்டுகளை விளையாடுவார்கள். அதில் ஒன்று ஜல்லிக்கட்டு. சீறிவரும் காளைகளை இளைஞர்கள் அடக்கும் சிங்க விளையாட்டு. இதில் காளைகளை அடக்கும் இளைஞர்கள் மட்டும் வீரர்கள் அல்ல. அடங்காத காளைகளும் வீரத்தின் அடையாளம்தான். ஆக, ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெறவேண்டும் என்று இளைஞர்களுக்கு மட்டுமல்ல, யாராலும் அடக்க முடியாத காளை என் காளை என்பதில், அந்த காளையின் உரிமையாளருக்கும் பெருமை உண்டு.
இந்த ஜல்லிக்கட்டு பற்றி பழங்கால இலக்கியங்களில், குறிப்பாக கலித்தொகையில்கூட பாடல் உண்டு. அப்போது இதை ஏறு தழுவுதல் என்பார்கள். இடையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடை உடைக்கப்பட்ட பிறகு, அதற்கான மவுசு அதிகரித்தது. மறுமலர்ச்சி பெற்ற ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டு பொங்கலையொட்டி, தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. அதில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை அடக்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் களத்தில் குவிந்தனர். பொங்கலன்று மதுரை அவனியாபுரத்திலும், அடுத்த நாள் பாலமேட்டிலும், 3-வதுநாள் அலங்காநல்லூரிலும் வெகுவிமரிசையாக நடந்தது. இந்த போட்டிகளில் ஒவ்வொரு காளையை அடக்கிய வீரருக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, செல்போன், சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை, எல்.இ.டி. டி.வி., பட்டுச்சேலை என்று விதவிதமாக பரிசுகள் வரிசைகட்டி வழங்கப்பட்டன.
அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில், முதல் பரிசாக காரும், இரண்டாவது பரிசாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மோட்டார் சைக்கிளும், களத்தில் கம்பீரமாக வலம்வந்து தன்னை யாரும் நெருங்கவிடாமல் அடக்க வந்த இளைஞர்களை ஓடஓட விரட்டிய காளையின் உரிமையாளருக்கு காரும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த 3 இடங்களிலும் நடந்த போட்டிகளையும் நேரில் மட்டுமல்லாமல், டெலிவிஷன் மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். இந்த போட்டிகளில் கார், மோட்டார் சைக்கிள், தங்க காசு போன்ற பரிசுகளை அள்ளி வழங்குவது குறித்து, இதெல்லாம் எதற்கு? விவசாய கருவிகளை பரிசாக வழங்கினால், விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்குமே என்றும் விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், இது ஒரு மகத்தான விளையாட்டு, இதற்கு மகத்தான பரிசு பொருட்களை வழங்குவதுதான் பொருத்தமுடையதாக இருக்கும் என்ற வகையில், இந்த பரிசுகள் வழங்குவது மிக மிக சரியே. இதை பெறுவதில் வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய பெருமை உண்டு. இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளைப்போல வரும் ஆண்டுகளிலும் இந்த வீர விளையாட்டு தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்களில் நடத்தப்படவேண்டும் என்பதே தமிழ் நெஞ்சங்களின் வேண்டுகோளாக இருக்கிறது.