இது புத்தாண்டு பரிசு
|பொதுவாக புத்தாண்டில் ஒருவருக்கொருவர் பரிசு வழங்குவது வழக்கம். இதை ‘புத்தாண்டு பரிசு’ என்று அழைப்பது உண்டு.
பொதுவாக புத்தாண்டில் ஒருவருக்கொருவர் பரிசு வழங்குவது வழக்கம். இதை 'புத்தாண்டு பரிசு' என்று அழைப்பது உண்டு. அதுபோல மத்திய அரசாங்கம் அடுத்த 3 மாதங்களில் சிறுசேமிப்புகளில் முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு, அவர்களுக்கு கிடைக்கும் வட்டியை உயர்த்தி புத்தாண்டு பரிசு அளித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த வெற்றிகரமான முதலீட்டாளரும், உலகில் உள்ள செல்வந்தர்களில் ஒருவருமான வாரன் பப்பெட், சிறுசேமிப்பை பற்றி கூறிய ஒரு நன்மொழி எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஒரு அறிவுரையாகும்.
'நீங்கள் உங்கள் வருமானத்தில் செலவழித்தது போக மீதியை சேமிக்காதீர்கள். உங்கள் சேமிப்பு போக மீதி தொகையை செலவழியுங்கள்', என்கிறார். இது கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், இந்த புத்தாண்டில் இந்த பொன் விதியை அனைவரும் பின்பற்றினால் எதிர்காலத்துக்கு ஒரு உத்தரவாதம் அளிப்பது போல் இருக்கும். எதிர்காலத்துக்கு என்று சேமிக்காமல் நிகழ்காலத்தில் வருமானம் முழுவதையும் செலவழித்து விட்டால், எதிர்கால வாழ்க்கை சக்கரம் சுழல மிகவும் சிக்கல் ஏற்பட்டுவிடும்.
இந்த தத்துவத்தை உணர்ந்த மக்கள் தங்களின் எதிர்கால செலவுகளுக்காக குறிப்பாக முதிர்வயதில் தங்கள் வாழ்க்கை செலவுகளுக்காக, மருத்துவ செலவுகளுக்காக, வீடு வாங்க, வாகனம் வாங்க, பிள்ளைகளின் கல்வி, திருமண செலவு போன்ற பல செலவுகளுக்காக தபால் அலுவலகங்களில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். முக்கியமாக 'பென்ஷன்' கிடைக்கும் அரசு பணிகளில் இல்லாத மக்கள் அனைவரும் வேலை செய்து வருமானம் ஈட்ட முடியாத காலங்களில் தங்கள் செலவுகளுக்காக, சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்த 'டெபாசிட்'களில் இருந்து கிடைக்கும் வட்டியை நம்பியே வாழ்கிறார்கள்.
கடந்த சில காலங்களாக இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்ட காலத்தில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடைசியாக இந்த காலாண்டில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் மொத்தம் உள்ள 12 சேமிப்பு திட்டங்களில் 5 திட்டங்களுக்கு மட்டுமே வட்டி விகிதம் 0.10 சதவீதம் முதல் 0.30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இந்த புத்தாண்டில் சிறுசேமிப்பில் முதலீடு செய்த மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள 12 சேமிப்பு திட்டங்களில் 8 திட்டங்களுக்கான வட்டி மட்டும் 0.20 சதவீதம் முதல் 1.10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஒரு ஆண்டு சேமிப்பு 'டெபாசிட்'டுக்கான வட்டி 5.5 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாகவும், கிசான் விகாஸ் சேமிப்பு பத்திர வட்டி 7 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு வட்டி 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது. ஆனால் பெண் குழந்தைகளுக்கான 'செல்வமகள் திட்டம்', 'பொது வருங்கால வைப்பு நிதி' உள்பட 4 சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி உயர்த்தப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டால் எதிர்பார்த்ததைவிட இந்த உயர்வு குறைவாகவே இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருதினாலும், இந்த அளவுக்காவது உயர்த்தினார்களே... என்ற மகிழ்ச்சியும், வரும் காலாண்டுகளில் இதைவிட உயர்த்தவேண்டும், அனைத்து சேமிப்பு திட்டங்களுக்கும் உயர்த்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் சமுதாயத்தில் இருக்கிறது.