விடை பெறுகிறதா மாஞ்சோலை?
|மேற்குதொடர்ச்சி மலையில் சுமார் 4,300 அடி உயரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில் எந்தப்பக்கம் திரும்பினாலும் பச்சை பசேலென்று பசுமைப்போர்த்திய தேயிலை தோட்டங்களாகவே இருக்கும்.
சென்னை,
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் ஆர்ப்பரித்து விழும் அருவிகளில் ஆனந்த குளியல் போடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குற்றாலம் மட்டுமல்ல, அதை சுற்றியுள்ள தமிழ்நாடு, கேரளாவில் உள்ள எழில்மிகு மலைப்பகுதிகள் உள்பட பல இடங்கள் மனதை கொள்ளை கொள்ளும். இதில் மாஞ்சோலை எஸ்டேட்டின் அழகு மெய்சிலிர்க்க வைக்கும். மேற்குதொடர்ச்சி மலையில் சுமார் 4,300 அடி உயரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில் எந்தப்பக்கம் திரும்பினாலும் பச்சை பசேலென்று பசுமைப்போர்த்திய தேயிலை தோட்டங்களாகவே இருக்கும். இந்த பகுதியில் எப்படி தேயிலைத்தோட்டம் வந்தது? என்பது மிக ஆச்சரியமாக இருக்கும். அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டி ஜமீனிலிருந்து 1929-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம், அடர்ந்த காட்டுப்பகுதியில் 8,374 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும், அருகிலுள்ள கேரளா பகுதிகளிலிருந்தும் வேலைக்கு ஆட்களை வரவழைத்து அந்த காட்டை எஸ்டேட்டாக மாற்றி தேயிலை, காப்பி, ஏலக்காய், மிளகு பயிரிட்டனர்.
இந்த எஸ்டேட்டை சுற்றியுள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என்ற பகுதிகளில் 5 ஆயிரம் பேர் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது தொழிலாளர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் வாழ்கிறார்கள். தேயிலை ஆலைகளும் இருக்கின்றன. இப்போது அங்கு ரேஷன் கடைகள், 2 தொடக்க பள்ளிக்கூடங்கள், உயர்நிலைப்பள்ளிக்கூடம், குழந்தைகள் காப்பகம், கோவில்கள், தேவாலயம், மசூதி என்று எல்லாமே இருக்கிறது. சுற்றுலாப்பயணிகளும் வனத்துறை அனுமதிபெற்று வந்து செல்கின்றனர். இந்த நிலையில் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தமிழக அரசு மாஞ்சோலை எஸ்டேட்டில் உள்ள 8,374 ஏக்கர் உள்பட 23,000 ஏக்கர் நிலத்தை 'ரிசர்வ் பாரஸ்ட்' அதாவது, காப்புக்காடாக மாற்ற உத்தரவிட்டது. இந்த நிலத்துக்கு பட்டாவேண்டும் என்று 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து குத்தகைக்காலமான 2028-க்குள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று தீர்ப்பளித்துவிட்டது. இப்போது அந்த நிறுவனம் படிப்படியாக தொழிலாளர்களுக்கு இழப்பீடு கொடுத்து வீட்டுக்கு அனுப்பும் முயற்சியை தொடங்கிவிட்டது.
பரம்பரை பரம்பரையாக நாங்கள் குளுமையான இந்த மலைப்பிரதேசங்களில் வாழ்ந்துவிட்டோம், தேயிலை தோட்ட தொழிலைத்தவிர எங்களுக்கு வேறு வேலையும் தெரியாது. நாங்கள் சமவெளியில் போய் என்ன வேலைபார்க்க முடியும்? அரசு இந்த எஸ்டேட்டை காப்புக்காடாக மாற்றுவதற்கு பதிலாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் தமிழக அரசின் தேயிலை தோட்டக்கழகம் சார்பில் நடத்தும் எஸ்டேட்டுகளில் இலங்கை அகதிகளுக்கு வேலை கொடுத்ததுபோல மாஞ்சோலை எஸ்டேட்டையும் அரசு தேயிலைத்தோட்டமாகவே வைத்து எங்களுக்கு வேலை கொடுக்கவேண்டும். நாங்கள் இங்கேயே வாழ்கிறோம் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
இந்த நிறுவனத்துக்கு சொந்தமான வால்பாறை, ஊட்டி போன்ற பல இடங்களில் இருக்கும் எஸ்டேட்டுகளில் மாற்றுவேலை கொடுப்பதற்கு நிர்வாகம் முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி ஆலை நிர்வாகமும், தொழிலாளர்களும் நடத்தப்போகும் பேச்சுவார்த்தைக்கு பிறகு, அதனடிப்படையில் அரசு முடிவெடுக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆக என்ன முடிவெடுக்கப்பட்டாலும் உள்ளம் கொள்ளை போகுதே என்று சுற்றுலா பயணிகளை மகிழ வைத்த மாஞ்சோலை எஸ்டேட் விரைவில் விடைபெறப்போகிறது. தேயிலை தோட்டங்களெல்லாம் சில ஆண்டுகளில் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிகளாக மாறப்போகிறது. மனிதர்கள் நடமாட்டம் போய், இனி விலங்குகள் நடமாட்டம்தான் அங்கு இருக்கப்போகிறது.