< Back
தலையங்கம்
49 ஆண்டுகளுக்கு பிறகு இது தேவையா?
தலையங்கம்

49 ஆண்டுகளுக்கு பிறகு இது தேவையா?

தினத்தந்தி
|
23 July 2024 6:28 AM IST

நெருக்கடி நிலை முடிந்தவுடன் இந்திராகாந்தியும் மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துவிட்டார்.

கடந்த 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில், நெருக்கடி நிலை பிரகடனம் குறித்து அவ்வப்போது பேசப்பட்டதே தவிர, அதனால் பெரும் தாக்கம் ஏற்படவில்லை. ஆனால், இந்த முறை தேர்தல் பிரசாரத்தின் போதே காங்கிரஸ் சார்பில், "பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தையே மாற்றி விடுவார்கள்" என்று தீவிரமாக பேசப்பட்டு வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பா.ஜனதா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்தே, இந்திராகாந்தியால் 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதை நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், பல கருத்துகள் வெளியாகி வந்தன.

நாடாளுமன்றம் கூடிய முதல் நாளிலேயே, அதாவது ஜூன் 24-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாளை ஜூன் 25-ந்தேதி என்பது நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட 50-வது ஆண்டு தொடக்க நாள். இந்த நாள் ஜனநாயகத்தின் கரும்புள்ளி. அரசியல் சட்டத்தின் மீது நடத்தப்பட்ட பெரிய தாக்குதலை எதிர்கால சந்ததியினர் மறக்கமாட்டார்கள்" என்று பேசினார்.

அடுத்து, 26-ந்தேதி சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், யாரும் எதிர்பார்க்காத வகையில், நெருக்கடி நிலைக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானத்தை கொண்டுவந்தார். இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றும்போது, "நெருக்கடி நிலை அமலில் இருந்த காலம் இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம். இது நமது அரசியல் சாசனத்தின் மீதான நேரடி தாக்குதல். இதனால் நாடே கொதித்துபோனது" என்று பேசினார். எல்லோரும் இந்தப் பிரச்சினை இதோடு முடிந்துவிட்டது என்று நினைத்தார்கள்.

ஆனால், பா.ஜனதா அரசாங்கம் அதோடு விட்டுவிடவில்லை. தொடர்ந்து, "நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டு, அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. "நெருக்கடி நிலையை எதிர்த்து போராடி பல இன்னல்களை அனுபவித்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் இந்த நாள் கடைபிடிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடியும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது, "அரசியல் சட்டம் காலில் போட்டு நசுக்கப்பட்ட காலகட்டத்தில் என்னென்ன நடந்தது? என்பதை நினைவூட்டும் தினமாக இந்த நாள் அனுசரிக்கப்படும். இந்திய வரலாற்றில் இருண்ட கட்டத்தை காங்கிரஸ் கட்சி கட்டவிழ்த்துவிட்டு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததால் நடந்த அத்துமீறலில் துன்புறுத்தலுக்கு ஆளான ஒவ்வொருவருக்கும் அஞ்சலி செலுத்தும் நாள் இது" என்று குறிப்பிட்டுள்ளார்.

49 ஆண்டுகள் ஆகிவிட்டன. இனியும் இந்த பிரச்சினை தேவையா? என்று எல்லோரையும் இந்த செயல்கள் எண்ண வைத்துவிட்டது. நெருக்கடி நிலை முடிந்தவுடன் இந்திராகாந்தியும் மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துவிட்டார். மேலும், இன்றைய இளம் தலைமுறைக்கு நெருக்கடி நிலை பிரகடனம் பற்றி எதுவும் தெரியாது. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் நெருக்கடி நிலை பிரகடனம் பற்றி தெரியும். அந்த வகையில், யாருக்குமே என்னவென்று தெரியாத நெருக்கடி நிலையை அரசியலுக்கு பயன்படுத்துவதற்காகவே இப்போது அரசு கையில் எடுத்துள்ளது என்று எல்லோரும் கருதுகிறார்கள். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்து மக்களுக்கு தேவையான திட்டங்களுக்காக விவாதிப்பதை விட்டு விட்டு இப்படி ஒரு காலாவதியான பிரச்சினையை கையில் எடுக்க வேண்டுமா? என்பதே இப்போதுள்ள கேள்வியாக இருக்கிறது.

மேலும் செய்திகள்