இது செமிபைனலா? டிரெய்லரா?
|அடுத்த 6 மாதங்களில் இந்தியா நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது.
அடுத்த 6 மாதங்களில் இந்தியா நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது. 2 முறை பிரதமராக இருந்த நரேந்திர மோடி தலைமையில்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க. சாதுர்யமாக காய் நகர்த்த தொடங்கிவிட்டது. பிரதமர் நரேந்திரமோடி எப்படியும் பா.ஜ.க. தான் 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என மிக உறுதியாக பிரகடனப்படுத்தி வருகிறார். எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு இந்த முறை பா.ஜ.க.வை பதவியிலிருந்து இறக்கியே ஆகவேண்டும் என்ற துடிப்பில் செயலாற்றிவருகிறது. வெவ்வேறு கொள்கைகளைக்கொண்ட கட்சிகளும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் 'இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது.
ஆக இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் அனைத்து கட்சிகள் மட்டத்திலும் தொடங்கிவிட்டன. அதற்கு முன்பாக இப்போது 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கிறது. நாடாளுமன்றத்துக்கு முன்பு நடக்கும் இந்த தேர்தல் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையே ஈர்த்துள்ளது. 230 தொகுதிகளைக்கொண்ட மத்திய பிரதேசம், 200 தொகுதிகளைக்கொண்ட ராஜஸ்தான், 119 தொகுதிகளைக்கொண்ட தெலுங்கானா, 90 தொகுதிகளைக்கொண்ட சத்தீஷ்கார், 40 தொகுதிகளைக்கொண்ட மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 5 மாநிலங்களில் 679 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் தெலுங்கானா மட்டும் தென்மாநிலமாகும். மற்றவை வடமாநிலங்களாகும்.
தற்போது ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும், மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியில் இருக்கிறது. ராஜஸ்தானை பொறுத்தமட்டில், பா.ஜ.கவும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த முறை அந்த கணக்கை மாற்றி தாங்களே ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு வருகிறது. அதுபோல தெலுங்கானா மாநிலத்தில், பாரத ராஷ்டிர சமிதி தலைவரான முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவ் தலைமையிலான அரசு இருமுறை தொடர்ந்து வெற்றிபெற்று ஆட்சி அமைத்த நிலையில், இப்போது 3-வது முறையாக 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற இலக்கில் தன் பணிகளை தொடங்கிவிட்டது.
மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி நடக்கிறது. தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் மும்முனை போட்டி நடக்கிறது. மிசோரமில் மிசோ தேசிய முன்னணியின் கைதான் ஓங்கியிருக்கிறது. சாதி, நலத்திட்டங்கள், விவசாயிகள் பிரச்சினைகள், தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவை தேர்தல் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மிசோரமில் அந்த மாநில இன மக்களின் பிரச்சினைகள்தான் பெரிதும் கவனிக்கப்படுகிறது.
இந்த 5 மாநில தேர்தல் முடிவுகளை நாடாளுமன்ற தேர்தலுக்கான 'செமிபைனலா'? அல்லது 'டிரெய்லரா'? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் இருக்கிறது. இந்த மாநிலங்களில் நடந்த பல தேர்தல்களில் மாநிலத்துக்கு ஒரு கட்சிக்கும், மத்திய அரசாங்கத்துக்கு வேறு ஒரு கட்சிக்கும் ஓட்டுப்போட்டுள்ள வரலாறு இருக்கிறது. ஆனால் இந்த முறை அடுத்த 4, 5 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதாலும், இப்போதுள்ள பிரச்சினைகளின் அடிப்படையிலும் மக்களின் மன ஓட்டத்தை அறிய இந்த தேர்தல் முடிவுகள் துணைநிற்கும்.