< Back
தலையங்கம்
இது பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலிப்பா?
தலையங்கம்

இது பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலிப்பா?

தினத்தந்தி
|
11 May 2024 6:22 AM IST

ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது மாதத்துக்கு ரூ.1 லட்சம் கோடி வசூலிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சென்னை,

வரி வசூலில் 2017-ம் ஆண்டு ஒரு மாபெரும் புரட்சி நடந்தது. அந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி நள்ளிரவில் நடந்த நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதற்கான 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. உடனடியாக அப்போது ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தால் ஒப்புதலும் பெறப்பட்டு, ஜூலை 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது.

அதுவரை நாட்டில் நேரடிவரி, மறைமுக வரி என்ற வகையில் வரிவசூல் இருபிரிவாக இருந்தது. நேரடி வரியில் வருமானவரி இருந்தது. மறைமுக வரியில் மத்திய கலால்வரி, கூடுதல் கலால்வரி, சேவைவரி, மதிப்புக்கூட்டு வரி, மத்திய விற்பனை வரி, நுழைவுவரி, சொகுசுவரி, கொள்முதல்வரி போன்ற பல வரிகள் வசூலிக்கப்பட்டன. இந்த வரிகளையெல்லாம் தனித்தனியாக வசூலிப்பதற்கு பதிலாக ஒன்றிணைத்து ஒரேவரியாக வசூலிப்பதுதான் ஜி.எஸ்.டி.யின் முக்கிய நோக்கம். இந்த வரிவிகிதம் 5, 12, 18, 28 என்ற சதவீதங்களில் வசூலிக்கப்படுகிறது. மசோதாக்கள் நிறைவேற்றிய புதிதில், 211 பொருட்கள் மற்றும் சேவைகள் ஜி.எஸ்.டி. வரம்பில் இருந்தன. இந்த வரிவிதிப்பினால் தங்களுக்கு வருவாய்இழப்பு ஏற்படும் என்று மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் மத்திய அரசாங்கம் இதற்காக 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தது. அதற்காக 'செஸ்' என்று சொல்லப்படும் மேல்வரியையும் மத்திய அரசாங்கம் விதித்தது. இழப்பீடு வழங்குவதற்கான 5 ஆண்டு காலக்கெடு முடிந்துவிட்டது. இப்போது மாநிலங்களுக்கு இழப்பீடு கிடையாது. ஆனாலும் மத்திய அரசாங்கம் செஸ் வரியை தொடர்ந்து வசூலித்து வருகிறது.

ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது மாதத்துக்கு ரூ.1 லட்சம் கோடி வசூலிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போதெல்லாம் ரூ.1 லட்சம் கோடியை எட்டுவது குதிரைக்கொம்பாக இருந்தது. முதன்முதலாக 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டது. இப்போது பெரிய சாதனையாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டு உச்சத்தை அடைந்தது. கடந்த நிதியாண்டின் மாதாந்திர சராசரி வசூல் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடியாகும்.

நாட்டின் பிரமாண்ட வளர்ச்சி, மக்களின் வாங்கும்சக்தி-செலவழிக்கும் திறன் மற்றும் பொருட்களின் விலை உயர்வும்தான் இவ்வளவு பெரிய வசூலுக்கு காரணம். அதிலும் குறிப்பாக, மோட்டார் வாகனங்கள், மக்கள் அதிகம் வாங்கும் வீட்டு உபயோக பொருட்களின் விலையெல்லாம் உயர்ந்திருப்பது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக, முன்பு 150 சி.சி. மோட்டார் சைக்கிளின் விலை ரூ.71 ஆயிரமாக இருந்தது. இப்போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. இத்தகைய மோட்டார் வாகனங்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது. ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனையிலேயே இவ்வளவு வருவாய் உயர்வு என்றால், ஒட்டுமொத்த பொருட்களின் விலை உயர்வினால் எவ்வளவு வரிவருவாய் கிடைத்திருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளலாம். மற்றொரு காரணம், உற்பத்தி மற்றும் சேவையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.

வருவாய் அபரிமிதமாக உயர்ந்து கொண்டிருப்பதால், அதற்கேற்ற வகையில் மத்திய அரசால் சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது. இப்போதிருக்கும் 3, 5, 12, 18, 28 சதவீதங்களில் வரிவசூலிக்கப்படுவதற்கு பதிலாக, ஒன்று அல்லது இரண்டு வகையான வரிவிகிதங்களில் மட்டும் வசூலிக்கப்பட வேண்டும், 28 சதவீதத்தை முழுமையாக ரத்துசெய்யவேண்டும் என்று தொழில்துறையினர் கோரிக்கை விடுக்கிறார்கள். வருமானம் பெருகிவிட்டது, இனி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும்.

மேலும் செய்திகள்