இலங்கை பிரதமரான இந்திய மாணவி!
|ஹரினி அமரசூரியா, இலங்கை நாட்டின் 16-வது பிரதமராகவும், 3-வது பெண் பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளார்
சென்னை,
அண்டை நாடான இலங்கையில் 2022-க்கு பிறகு அரசியலிலும், பொருளாதார ரீதியிலும் பெரிய சூறாவளி அடித்துக்கொண்டு இருக்கிறது. சுற்றுலா வருவாயை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில் கொரோனாவால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாரும் எட்டிப்பார்க்காத காரணத்தால் வருவாய் பெரிதும் வீழ்ச்சி அடைந்தது. வேலையில்லா திண்டாட்டமும் தலை விரித்தாடியது. உணவு பொருட்களின் விலையெல்லாம் ராக்கெட் வேகத்தில் எகிறியது. வறுமையின் கோர தாண்டவத்தை தாங்கமுடியாத இலங்கை மக்கள் ஆட்சியாளர்கள் மீது கடும் சினம் கொண்டனர்.
எல்லோருமே வீதிக்கு வந்து போராடினார்கள். அதிபர் மாளிகை மக்களால் முற்றுகையிடப்பட்டது. அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தன் உயிரை காப்பாற்ற குடும்பத்துடன் நாட்டை விட்டே ஓடினார். பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றார். பிரதமராக தினேஷ் குணவர்தனே பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை புதிய அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த திசநாயகா வெற்றி பெற்றார்.
இதன் தொடர்ச்சியாக, பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே ராஜினாமா செய்துவிட்டார். புதிய நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14-ந் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிபர் திசநாயகா தனக்கு உதவியாக புதிய மந்திரிசபையை நியமித்தார். பிரதமராக ஹரினி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார். 54 வயதான அவர் இலங்கையின் 3-வது பெண் பிரதமராவார். முதல் பெண் பிரதமராக 1960-ல் ஸ்ரீமாவோ பண்டாரநாயகே பதவி வகித்தார்.
2-வது பிரதமராக அவருடைய மகள் சந்திரிகா பண்டாரநாயகே குமாரதுங்க பொறுப்பேற்றார். இப்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு ஹரினி அமரசூரியா, அந்த நாட்டின் 16-வது பிரதமராகவும், 3-வது பெண் பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளார். கல்வியாளரான இவர் இந்திய மாணவி என்பது சிறப்புக்குரியது. இவர் தனது சமூகவியல் பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள இந்து கல்லூரியில் 1991 முதல் 1994 வரை படித்தார். அதன்பிறகு ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று முதுநிலை பட்டப்படிப்பை படித்த அவர் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பிரபலமான எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி பட்டத்தையும் பெற்றார்.
பின்னர், அவர் இலங்கை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அதன் பிறகு, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக அவரது கட்சியின் வாக்கு சதவீத அடிப்படையில் தேசிய பட்டியல் மூலமாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தாற்போல விஜிதா ஹெராத் வெளிவிவகாரத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிபராக பொறுப்பேற்றுள்ள திசநாயகா தன் வசம் ராணுவம், நிதி, விவசாயம், மீன்வளம், கடல்வளம், எரிசக்தி உள்பட பல துறைகளை வைத்து இருக்கிறார்.
ஆக, இந்தியாவுடன் கொண்டுள்ள உறவை மேம்படுத்துவது இந்த மூவரின் கையிலும் இருக்கிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினையை கையாளுவது அதிபர் திசநாயகாவிடமும், விஜிதா ஹெராத்திடமும் இருக்கிறது. இந்திய மாணவி என்ற முறையில் பிரதமர் ஹரினி அமரசூரியாவும் ஒரு தாய் உள்ளத்தோடு இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு சுமுக முடிவை எடுக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த புதிய மந்திரிசபை இந்தியாவுடன் நல்லுறவை பேணவேண்டும், தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு வேண்டும் என்பதே நமது கோரிக்கையாக இருக்கிறது.