< Back
தலையங்கம்
புது வீட்டுக்கு சென்ற இந்திய ஜனநாயகம் !
தலையங்கம்

புது வீட்டுக்கு சென்ற இந்திய ஜனநாயகம் !

தினத்தந்தி
|
20 Sept 2023 1:22 AM IST

பிரதமர் நரேந்திரமோடி கூறியதுபோல, விநாயகர் சதுர்த்தியன்று புதிய பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி கூறியதுபோல, விநாயகர் சதுர்த்தியன்று புதிய பயணம் தொடங்கப்பட்டுள்ளது. எப்படி, பரம்பரை பரம்பரையாக ஒரு வீட்டில் இருந்த நிலையில், அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு புதிய வீட்டை குடும்பத்தினர் கட்டி அதில் குடிபோகும் நாள் எவ்வளவு கோலாகலமாக இருக்குமோ, அதே உணர்வோடு மங்களகரமான விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று நமது பிரதமரும், மந்திரிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சென்று மகிழ்வோடு குடியேறினார்கள்.

இந்தியாவின் ஜனநாயக கோவிலாக வர்ணிக்கப்படும் பழைய நாடாளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர்களின் 900 ஆண்டு கால ஏகாதிபத்திய ஆட்சியின் அடையாளமாகவும், சுதந்திர இந்தியாவின் வரலாறாகவும் இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பழைய நாடாளுமன்ற கட்டிடம் 1921-ம் ஆண்டு கட்ட தொடங்கி, 1927-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. முதல் நாடாளுமன்ற கூட்டத்தில், அப்போது வைஸ்ராயாக இருந்த இர்வின் பிரபு கலந்து கொண்டார். நாடு சுதந்திரம் அடைந்தவுடன் முதல் கூட்டத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'விதியோடு ஒரு ஒப்பந்தம்' என்ற தலைப்பில் ஆற்றிய உரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படத்தக்க வகையில் இருந்தது.

இந்திய அரசியல் சட்டம் தன் பயணத்தை இந்த கட்டிடத்தில்தான் தொடங்கியது. ஜவஹர்லால் நேரு, குல்ஜாரிலால் நந்தா, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங், ராஜீவ்காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், பி.வி.நரசிம்மராவ், அடல் பிகாரி வாஜ்பாய், தேவேகவுடா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகிய 14 பிரதமர்களுக்கு பிறகு, இப்போது நரேந்திரமோடி என்று 15 பிரதமர்களின் அளப்பரிய சேவைகள் இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்துதான் நாட்டுக்கு கிடைத்தது. இந்த கட்டிடத்துக்கு விடை கொடுக்கும் வகையில் நேற்று முன்தினம் மைய கட்டிடத்தில் பிரதமரும், மற்ற தலைவர்களும் ஆற்றிய உரைகள் உணர்ச்சி பொங்கும் வகையில் இருந்தது. இதுவரை நடந்த கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு உறுப்பினர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று பிரதமர் பேசியது மனதை நெகிழ செய்தது.

பல வரலாற்று சிறப்புமிக்க சட்டங்கள், அறிவிப்புகள், பட்ஜெட்டுகள் நிறைவேற்றப்பட்ட பெருமை இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு உண்டு. சரக்கு சேவை வரி அமலுக்கு வந்ததும் இங்கு இருந்துதான். 96 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இப்போது புதிதாக கட்டப்பட்டுள்ள மிகப்பிரமாண்டமான கட்டிடத்துக்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டிய அவரது கரங்களே 2023-ம் ஆண்டு மே மாதம் 28-ந்தேதி திறந்து வைத்தது. நேற்று தன் புதிய பயணத்தை ஜனநாயகம் இந்த புதிய கட்டிடத்தில் இருந்து தொடங்கியது. முதல் அலுவலாக சிறப்பு கூட்டத்தொடர் இங்குதான் நடக்கிறது.

நீண்ட பல ஆண்டுகளாக நாடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா, இந்த புதிய கட்டிடத்தில்தான் நிறைவேறப்போகிறது. மக்களவையில் 10 முறை உறுப்பினராகவும், சபாநாயகராகவும் இருந்த, சிறந்த அரசியல்வாதியும் பன்முக திறமையும் கொண்ட மறைந்த சோம்நாத் சாட்டர்ஜி சொன்னதுபோல, நாடாளுமன்றத்தின் மேன்மை என்பது அதன் கம்பீரமான கட்டிடத்தில் இல்லை, அங்கு நடக்கும் தரமிக்க விவாதங்களில்தான் நீடித்து நிலைத்து இருக்கிறது என்ற வகையில், இந்த புதிய கட்டிடத்தில் நடக்கும் கூட்டங்கள் அமைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் செய்திகள்