< Back
தலையங்கம்
அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா !
தலையங்கம்

அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா !

தினத்தந்தி
|
25 April 2023 12:28 AM IST

உலகிலேயே மக்கள்தொகையில் முதல் இடம் இந்தியாவுக்குத்தான் என்ற பெருமை கிடைத்துள்ளது.

எல்லா துறைகளிலும் முதல் இடத்துக்கு வரவேண்டும் என்ற இலக்கில் முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்தியா, இப்போது எந்த முயற்சியும் எடுக்காமல் மக்கள்தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்துக்கு வந்துவிட்டது. உலகிலேயே மக்கள்தொகையில் முதல் இடம் இந்தியாவுக்குத்தான் என்ற பெருமை கிடைத்துள்ளது. மகாகவி பாரதியார் எழுதிய 'பாரத சமுதாயம் வாழ்கவே...' என்ற பாடலில் 'முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை, ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை-வாழ்க!' என்று பெருமையோடு பாடியதோடு விட்டுவிடாமல் 'முப்பது கோடி வாய் (நின்னிசை) முழங்கவும், அறுபது கோடி தோளுயர்ந்துனக் காற்றவும் திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்' என்று 30 கோடி மக்கள் தொகையையே, 60 கோடி தோள் இருக்கிறது என பெருமிதம் பாராட்டினார்.

இப்போது ஐ.நா. சபை தயாரித்த உலக மக்கள்தொகை அறிக்கையின்படி, வருகிற ஜூலை 1-ந்தேதி இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியே 90 லட்சமாக இருக்கும் என்றும், இதுவரை முதல் இடத்தில் இருந்த சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவை விட இந்தியாவின் மக்கள் தொகை 29 லட்சத்து 60 ஆயிரம் அதிகமாக இருக்கும். 1980-ல் 69 கோடியே 70 லட்சமாகவும், 2010-ல் 121 கோடியே 50 லட்சமாகவும் இருந்த மக்கள்தொகை இப்போது இவ்வளவு அதிகமாகிவிட்டதே... என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

ஏனெனில் இந்திய மக்கள்தொகையில் 14 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை 36 கோடியாகவும், 40 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை 60 கோடியாகவும் இருக்கும். இவ்வளவு இளைய சமுதாயத்தைக் கொண்ட நாடு இந்தியாவைத்தவிர சீனா உள்பட எந்த நாடும் இல்லை. சராசரி இந்தியன், சீனாவின் சராசரி சீனரைவிட 10 ஆண்டுகள் இளையவர். 15 வயது முதல் 64 வயது வரை உள்ள உழைக்கும் வர்க்கத்தினர் 68 சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஆக, உழைக்கும் கரங்கள் இந்தியாவில் இப்போது அதிகமாக இருக்கின்றன. இவர்களுக்கெல்லாம் தகுந்த வாய்ப்புகளை அளித்து அவர்களின் உழைக்கும் ஆற்றலை பயன்படுத்திக்கொள்வது சவால்கள் மட்டுமல்ல, கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என்றே நிபுணர்கள் கருதுகிறார்கள்.

எனவே மத்திய-மாநில அரசாங்கங்கள் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, மருத்துவம், வீட்டுவசதி, போக்குவரத்து, மின்சார வசதி திட்டங்களில் அதிக முதலீடு செய்யவேண்டும். இதற்கு புதிய தொழில்களையும் தனியார் பங்களிப்புடன் தொடங்க அதிக ஊக்கங்கள், சலுகைகள் வழங்கப்படவேண்டும். இதுமட்டுமல்லாமல் முதியோருக்கான சமூகநல திட்டங்களையும் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு வகுக்கவேண்டும். மேலும் கருத்தரிப்பு சதவீதம் வெகுவாக குறைந்துகொண்டு இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த கணக்கை பார்த்தால் வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில்தான் கருத்தரிப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் தொகுதி வரையறை மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. அத்தகைய நிலையில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையவும் உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் பாதிக்காத வகையில் மத்திய அரசாங்கம் ஒரு கொள்கை எடுக்கவேண்டும் என்பதும் மாநிலங்களின் கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் செய்திகள்