பொருளாதார வளர்ச்சியில் 'ஹாட்ரிக்' பாய்ச்சல்!
|இந்தியா அனைத்து துறைகளிலும் வேகமான முன்னேற்றத்தைக் கண்டு வருவது, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையளிக்கும் ஒன்றாகும்.
இந்தியா அனைத்து துறைகளிலும் வேகமான முன்னேற்றத்தைக் கண்டுவருவது, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையளிக்கும் ஒன்றாகும். 2023-ம் ஆண்டில் உலகில் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 5-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. முதல் இடத்தில் அமெரிக்கா, 2-வது இடத்தில் சீனா, 3-வது இடத்தில் ஜெர்மனி, 4-வது இடத்தில் ஜப்பான் ஆகிய நாடுகள் இருக்கின்றன. பல்வகை வளர்ச்சி, வேகமான வளர்ச்சி என்ற சாதனைக்கு தகவல் தொழில்நுட்பம், சேவைத்துறைகள், விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள வளர்ச்சியே உந்து சக்தியாக விளங்குகிறது. இளமையான, தொழில்நுட்பத்துறையுடன் கூடிய தொழிலாளர் வர்க்கம் இந்தியாவுக்கு வலுசேர்க்கிறது.
இந்தியா வளர்கிறது என்பதற்கு மற்றொரு சான்று, நடுத்தர வகுப்பு மக்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டு போவதுதான். இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றும்போது, "2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, உலக பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்தோம். இன்று 140 கோடி மக்களின் முயற்சிக்கு பலன் கிடைத்து, உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்தை அடைந்துள்ளோம்" என்று பேசினார். "அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் 3-வது பொருளாதார நாடாக மாற்றிக்காட்டுவேன்" என்று பிரதமர் நரேந்திரமோடி சூளுரைத்து, அந்த இலக்கை அடையும் வகையில் திட்டங்களை தீட்டி வருகிறார்.
ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா 3-வது இடத்துக்கு வரும் என்று பிரதமர் நரேந்திரமோடி மட்டும் சொல்லவில்லை. சர்வதேச நிதி ஆணையத்தின் மதிப்பீட்டில், "2025-ல் இந்தியா 4-வது இடத்துக்கும், 2027-ல் 3-வது இடத்துக்கும் சென்றுவிடும். அப்போது இந்தியா 5.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார நாடாக இருக்கும்" என்றும் கூறியுள்ளது. ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல்-காசா போர் சூழ்நிலையில், சர்வதேச அளவில் ஒரு மந்தமான சூழ்நிலை இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டான ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில், பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்த நிலையில், அதைத்தாண்டி 7.6 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. உற்பத்தித்துறையில் 13.9 சதவீதம், பயன்பாட்டு பிரிவுகளில் 10.1 சதவீதம், கட்டுமான தொழிலில் 13.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ரூ.7 லட்சத்து 15 ஆயிரம் கோடிக்கு உற்பத்தியும், ரூ.3 லட்சத்து 4 ஆயிரம் கோடிக்கு கட்டுமானங்களும் நடந்துள்ளன. கோர் இண்டஸ்டிரீஸ் என்று கூறப்படும் 8 முக்கிய தொழில்களின் உற்பத்தி அக்டோபர் மாதத்தில் 12.1 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், பங்கு சந்தையில் ஒரே நாளில் 4 லட்சத்து 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு பரிமாற்றமும் அபரிமிதமாக நடந்து சாதனை படைத்துள்ளது. ஆக, பொருளாதார வளர்ச்சியில் ஒரு 'ஹாட்ரிக்' பாய்ச்சலைப் பார்க்க முடிகிறது. வரி வசூலும் அபரிமிதமாக உள்ளது. இந்தியாவின் இந்த வியக்கத்தகு வளர்ச்சியைப் பார்த்து உலக நாடுகளின் முதலீடுகள் வரும். பல நாடுகள் இங்கு தொழில் தொடங்க முன்வருவார்கள். இந்த வேகத்தைப்பார்த்தால், 5 ஆண்டுகளில் அல்ல, அதற்கு முன்பாகவே பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை அடைய வாய்ப்பு இருக்கிறது.