கடந்த கால சம்பவங்கள் கற்றுக்கொடுக்கவில்லையா?
|2005-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் மந்திராதேவி கோவிலில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 340 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
கடந்த 20 ஆண்டுகளில் பல ஆன்மிக நிகழ்வுகளில் நடந்த கூட்ட நெரிசல்களில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அகால மரணம் அடைந்திருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும், இந்த சம்பவங்களில் இருந்து நிர்வாகங்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், ஆன்மிக பக்தர்களும் எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. ஒவ்வொரு முறையும், என்னென்ன குறைபாடுகளால் நெரிசல் மரணங்கள் நடந்ததோ, அதே காரணங்கள்தான் அடுத்தடுத்த துயரச் சம்பவங்களுக்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.
2005-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் மந்திராதேவி கோவிலில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 340 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, 2008 ஆகஸ்டு மாதத்தில் இமாசலபிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள நைனா தேவி கோவிலில் 162 பேரும், அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலுள்ள சாமுண்டாதேவி கோவிலில் 224 பேரும், 2011-ம் ஆண்டில் சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 104 பேரும், கடந்த ஆண்டு மத்தியபிரதேசம் இந்தூர் நகரிலுள்ள ஒரு கோவிலில் ராமநவமி விழாவில் 36 பேரும் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1992-ம் ஆண்டு கும்பகோணம் மகாமகத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 49 பேர் உயிரிழந்தனர். சென்னையில் கடந்த 2005-ம் ஆண்டு கே.கே.நகரில் பள்ளிக்கூடம் ஒன்றில் வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்ட உதவியை பெறுவதற்காக கூடிய பெருங்கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 42 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக இப்போது உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புலாரி முகல் காரி என்ற கிராமத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவை கேட்க 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். இந்த சொற்பொழிவை நடத்தியது, போலே பாபா என்றும், நாராயண் சாகர் ஹரி என்றும் அழைக்கப்படும் சூரஜ்பால் சிங் என்ற ஆன்மிக குருதான்.
65 வயதான அவர் ஒரு முன்னாள் தலைமைக் காவலர். உளவு பிரிவிலும் வேலைபார்த்த அனுபவம் அவருக்கு உண்டு. 10 ஆண்டுகள் காவல்துறையில் பணிபுரிந்துவிட்டு விருப்ப ஓய்வுபெற்று ஆன்மிக குருவானார். இவர் மற்றவர்களைப்போல காவி உடை அணிவதில்லை. கோட்-சூட் என்று நவநாகரிக உடையில் மனைவியோடு காட்சியளிப்பார். அவருடைய மனைவி மாதாஸ்ரீ என்று அழைக்கப்படுகிறார். போலே பாபாவின் அருளுரைகள் மனதுக்கு ஆறுதலை தரும் என்று அனைவரிடமும் பெரிய நம்பிக்கை உண்டு. சம்பவத்தன்று அவர் தன் அருளுரையை முடித்து புறப்பட்டபோது, அவருடைய காலை தொடுவதற்கும், காலடி மண்ணை எடுத்து நெற்றியில் பூசுவதற்கும் ஒருபெரும் கூட்டம் அவரை நோக்கி வந்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 121 பேர் உயிரிழந்துவிட்டனர். காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பரிதாபம் என்னவென்றால், மருத்துவமனையில் டாக்டர்களோ, மருத்துவ பணியாளர்களோ இல்லை. ஆம்புலன்சும் இல்லை. 80ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2½ லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள். இதுபோன்ற கூட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ அனுமதி வழங்கும் முன்பு, அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் வகையில் சகல ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ளதா?, போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திவிட்டே வழங்கவேண்டும். இனியும் இப்படி ஒரு சம்பவம் நாட்டில் எங்கும் நடந்துவிடக்கூடாது.