வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்!
|வரலாறுகாணாத தங்க விலை உயர்வு ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும், ஒரு சாராருக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
பணத்தைவிட அதிக மதிப்புமிகு பொருளாக கருதப்படுவது தங்கம்தான். தங்கம் இன்று நேற்றல்ல, ஆதிகாலம் தொட்டே, அதாவது பணம் கண்டுபிடிக்கப்படும் முன்பே பல நாகரிகங்களில் ஒரு மதிப்புமிகு பொருளாக கருதப்பட்டது. பழங்காலங்களிலேயே ஆணும், பெண்ணும் ஆபரணமாக அணிந்து இருந்தது பல இலக்கியங்களின் மூலமாக தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல், அகழ்வாராய்ச்சிகளிலும் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பண்டைய காலங்களைவிட தங்கத்தின் தேவை இப்போது மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் தங்கம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. திருமணத்தின்போது பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை வீட்டார், "பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள்?" என்று கேட்கும் வழக்கம், செல்வந்தர்கள் வீடுகளில் மட்டுமல்ல, ஏழை குடும்பங்களிலும் உள்ளது. ஆபரண தங்கம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஆண்களும் இதில் விதி விலக்கல்ல.
ஆபரணத்துக்காக மட்டுமல்ல, ஆத்திர அவசரத்துக்கு கடன் வாங்க தங்கம் பெரிதும் பயன்படுவதால், அந்த நோக்கத்துக்காகவும் தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது. இப்போதும் வங்கிகளில்கூட நகைக்கடன் வாங்குவது மிகவும் எளிது. அதனால்தான், தங்கத்துக்கான கிராக்கி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால், விலையும் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. 1920-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆக இருந்தது. 1980-ல் ஒரு பவுன் விலை ஆயிரம் ரூபாயை கடந்தது. 2006-ல் ஒரு பவுன் ரூ.6 ஆயிரமாகவும், 2016-ல் ரூ.20 ஆயிரமாகவும், 2020-ல் ரூ.30 ஆயிரமாகவும், 2022-ல் ரூ.40 ஆயிரமாகவும் இருந்த தங்கத்தின் விலை ஒருபோதும் குறையவேயில்லை.
மற்ற சேமிப்புகளைவிட அதிக வருவாய் தங்கத்தின் மீதான சேமிப்பில் கிடைப்பதால், இப்போது சேமிப்புக்காக தங்கம் வாங்குவதும் அதிகமாகிவிட்டது. தினமும் 'ஜெட்' வேகத்தில் உயர்ந்துவரும் தங்கத்தின் விலை, இப்போது பவுனுக்கு ரூ.48,840 ஆகிவிட்டது. ஒரு கிராம் விலை ரூ.6,105 ஆக இருக்கிறது. தங்கத்தின் விலை போகும் வேகத்தைப்பார்த்தால், வெகுவிரைவில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தாண்டிவிடும் என்பதுபோல தெரிகிறது. தங்கத்தை வாங்கும் அளவும், சர்வதேச அளவில் தங்கத்தின் முதலீடும் அதிகரித்து வருவதுதான் இப்போது ஏற்பட்டிருக்கும் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது.
மேலும், அமெரிக்காவில் வங்கிகளின் வட்டி விகிதம் குறையப்போகிறது என்ற தகவல் மற்ற சேமிப்புகளில் இருந்து தங்கத்தின் பக்கம் தாவ செய்துவிட்டது. சீனா, ரஷியா போன்ற பல நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்குவதும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தங்கத்தின் விலை உயர்வுக்கு ஜனவரி 22-ந்தேதி முதல் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசாங்கம் 14.5 சதவீதமாக உயர்த்தியது மற்றொரு காரணமாகவும் கூறப்படுகிறது.
இந்த வரி உயர்வினால் தங்கக் கடத்தல் அதிகமாகும் என்பதால், இந்த இறக்குமதி வரி உயர்வை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்த விலை உயர்வு சேமிப்புக்காக தங்கம் வாங்கியவர்களுக்கும், ஆபரணத்துக்காக ஏற்கனவே வாங்கியவர்களுக்கும் மிகுந்த ஆதாயம் என்றாலும், இப்போது தங்கள் தேவைக்காக வாங்குபவர்களுக்கு பெரும் கஷ்டம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எனவே, இந்த வரலாறுகாணாத தங்க விலை உயர்வு ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும், ஒரு சாராருக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது.