< Back
தலையங்கம்
புவி வெப்பமயமாதல்தான் இந்த பெருமழைக்கு காரணம்
தலையங்கம்

புவி வெப்பமயமாதல்தான் இந்த பெருமழைக்கு காரணம்

தினத்தந்தி
|
27 Jan 2024 3:42 AM IST

ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நமக்கு வேண்டிய மழை கிடைக்கிறது. ஆனால், சமீப ஆண்டுகளாக பருவமழை காலம் கடந்தும் பெருமழை பெய்து வருகிறது.

ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நமக்கு வேண்டிய மழை கிடைக்கிறது. ஆனால், சமீப ஆண்டுகளாக பருவமழை காலம் கடந்தும் பெருமழை பெய்து வருகிறது. பொதுவாக, வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகும்போதுதான் அதிகன மழை பெய்யும். ஆனால், இப்போதெல்லாம் வளிமண்டலத்தில் ஏற்படும் சுழற்சிக்கே கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடுகிறது.

கடந்த மாதம் 3, 4-ந்தேதிகளில்கூட சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 17, 18-ந்தேதிகளிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில், மழை கொட்டோ கொட்டென்று பெய்து பெரும் சீரழிவை ஏற்படுத்திவிட்டது. அதை வானிலை ஆய்வு மையத்தால்கூட கணிக்க முடியவில்லை. அப்போது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் ஒரே நாளில் 40 செ.மீ., 50 செ.மீ.க்கு மேல் அதிகனமழை பெய்தது. மேலும், காயல்பட்டினத்தில் 95 செ.மீ. அளவுக்கு பேய் மழை பெய்தது என்றால், இதை எந்தவகையில் சேர்ப்பது? என்பதுதான் குழப்பமாக இருக்கிறது. இந்த வரலாறு காணாத மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய மண்டல அதிகாரி கருத்து சொல்லும்போது, "புவி வெப்பமடைவதாலும், காலநிலை மாற்றம் காரணமாகவும் இனி வருங்காலங்களில் வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை காலங்களில், தென்னிந்திய பகுதிகளில் இதுபோன்ற பெரிய அளவிலான மழை அதிகரித்து காணப்படும்" என்ற அபாய மணியை ஒலித்துவிட்டார்.

இதற்கு காரணமான காலநிலை மாற்றத்தையும், புவி வெப்பமயமாதலையும் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் உலக அளவில் தொடங்கி 31 ஆண்டுகள் ஆகின்றன. பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும், அவர் மனைவி சவுமியாவும் இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த கடந்த சில ஆண்டுகளாகவே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஆனால், மக்களுக்கு இதனால் ஏற்படயிருக்கும் அபாயம் இன்னும் தெரியவில்லை. கரியமில வாயு, மீத்தேன் வாயு ஆகியவை காற்றில் அதிகம் கலப்பதுதான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாகும். அந்த வேலையை அதிகம் செய்வது பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாடுகள்தான்.

மின்சார உற்பத்தியில் அனல் மின்சார நிலையங்களுக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி திட்டங்களுக்கு, அதாவது காற்றாலை, சூரிய வெப்ப மின்சக்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல், வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை அனைவரும் பயன்படுத்த தொடங்க வேண்டும். தமிழ்நாட்டில் இப்போது மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள் விற்பனை அதிகரித்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. அண்மையில் துபாயில் நடந்த ஐ.நா.காலநிலை மாற்ற மாநாட்டில் கார்பன்-டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம், கடந்த 2019-ல் இருந்த அளவைவிட 2030-ம் ஆண்டில் 43 சதவீதமும், 2035-ம் ஆண்டில் 60 சதவீதமும் குறைக்கவேண்டும். அவ்வாறு குறைத்தால்தான் 2050-ல் கரிம சமநிலையை எட்ட முடியும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், இப்போது ஏற்பட்டதுபோல அடிக்கடி பெரிய மழை மற்றும் கடல் அரிப்பு, கடல் கொந்தளிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டுமென்றால், அரசும் கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மக்களுக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது.

மேலும் செய்திகள்