வலையை விரிவாக வீசுவோம்
|தொழில் முனைவோருக்கு சலுகைகள் வழங்குவதில் மாநிலத்துக்கு மாநிலம் முந்திக்கொண்டு இருக்கும் நிலையை பார்க்க முடிகிறது. மற்ற மாநிலங்களுக்கு செல்லும் தொழில் முனைவோரையும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர, இங்கு தொழில் தொடங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.
ஒரு மாநிலம் முன்னேறவேண்டும் என்றால், வேலை வாய்ப்பு பெருக வேண்டுமென்றால், பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு முக்கிய அடிப்படை தொழில் வளர்ச்சிதான். அதனால்தான் இந்தியா முழுவதிலும் இப்போது போட்டி போட்டுக்கொண்டு மாநிலங்கள் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகின்றன. தொழில் முனைவோருக்கு சலுகைகள் வழங்குவதில் மாநிலத்துக்கு மாநிலம் முந்திக்கொண்டு இருக்கும் நிலையை பார்க்க முடிகிறது. அதுபோல அனைத்து மாநிலங்களிலும் உலகளாவிய தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடந்து வருகிறது.
கடந்த மாதம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் 3 நாட்கள் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் ரூ.34 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 19 ஆயிரத்து 250 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. சோலார், காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிலுக்குத்தான் அதிக முதலீட்டு திட்டங்கள் அதாவது ரூ.4 லட்சத்து 47 ஆயிரம் கோடி அளவுக்கு கையெழுத்தாகின. இதுபோல ஆந்திராவில் நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.13 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான 340 திட்டங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் இதன் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். இதெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்தான். இதில் எத்தனை முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.
இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் ஐபோன் தயாரிக்கும் தைவான் நாட்டு நிறுவனமான பாக்ஸ்கான் நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மின்னணு சாதனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை பெங்களூருவில் தொடங்க இருக்கிறது என்றும், இதற்காக 300 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல தெலுங்கானா மாநிலத்திலும் பாக்ஸ்கான் நிறுவனம் மின்னணு கருவிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்க இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இரு தொழிற்சாலைகளிலும் தலா ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் தொழில் முதலீடுகளை ஈர்க்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11-ந் தேதிகளில் தமிழக அரசு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தும் என்றும், இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதோடு மட்டுமல்லாமல் உடனடியாக தொழில் தொடங்க வரும் தொழில்முனைவோர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வகையிலும், இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் வகையிலும் தொழில்துறை எந்திர கதியில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
ஆனால் அதுவரை காத்து இருக்காமல் இப்போதே வலையை விரிவாக வீசி மற்ற மாநிலங்களுக்கு செல்லும் தொழில் முனைவோரையும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர, இங்கு தொழில் தொடங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். உள் கட்டமைப்பு மேம்பாடுதான் பொருளாதார வளர்ச்சியை டாப் கியரில் எடுத்து செல்லும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதுபோல, மத்திய அரசாங்கமும் மற்ற மாநிலங்களுக்கு இணையாக உள்கட்டமைப்பு வசதிகளுக்கான ஒதுக்கீடுகளை தமிழ்நாட்டுக்கும் அதிக அளவில் வழங்க வேண்டும்.