< Back
தலையங்கம்
பொது சிவில் சட்டம்
தலையங்கம்

பொது சிவில் சட்டம்

தினத்தந்தி
|
22 Feb 2024 3:10 AM IST

பொது சிவில் சட்டம் தொடர்பாக மத்திய அரசாங்கம் மக்களிடம் கருத்துக்கேட்டு வருகிறது.

இந்தியாவில் பல மதங்கள், பல சாதிகள் இருக்கின்றன. மாநிலத்துக்கு மாநிலம், மதத்துக்கு மதம், சாதிக்குசாதி கலாசாரம், வாழ்க்கைமுறை வேறுபடுகிறது. குறிப்பாக திருமணம், விவாகரத்து, குழந்தைகளை தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் குற்றவியல் சட்டங்கள், தண்டனை சட்டங்கள் போன்ற பல சட்டங்கள் ஒட்டுமொத்த மக்களுக்கும் எந்தவித பாகுபாடில்லாமல் சமமாக இருக்கிறது.

இந்த சட்டங்களை பொறுத்தமட்டில், அனைவருக்கும் இது பொதுவானது. ஆனால் தனிநபர் சார்ந்த சிவில்சட்டங்கள், அதாவது திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை போன்றவற்றுக்கு மட்டும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின்கள், பார்சிக்கள் என்று ஒவ்வொரு மதத்தினருக்கும் என தனித்தனி சட்டங்கள் இருக்கின்றன. இவ்வாறு மதஅடிப்படையில் தனித்தனி சட்டங்கள் இருப்பதற்கு பதிலாக எல்லோருக்கும் ஒரே சட்டம் பொதுவாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் தோன்றியதுதான் பொது சிவில் சட்டம். இது இப்போது நிறைவேற்றப்படவில்லை. ஏற்கனவே சுதந்திரத்துக்கு முன்பே கோவாவில் இந்த சட்டம் அமலில் இருக்கிறது. இப்போதும் தொடருகிறது.

1998 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. பா.ஜனதாவின் கொள்கையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்பதுதான். ஆனால் சிறுபான்மையினர் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எங்களுக்கென்று இருக்கும் சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், வாழ்வியல் முறைகள், கலாசாரங்களை மாற்றமுடியாது என்பது அவர்களின் வாதம். இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டத்துக்கான மசோதாவை தாக்கல்செய்து நிறைவேற்றும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஆனால் பா.ஜனதா ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நாட்டிலேயே முதல்முறையாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்துக்கு முன்பே உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்திருந்த அந்த மாநில முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, இதற்கான மசோதாவை உருவாக்க ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தலைமையில் ஒரு குழுவை கடந்த 2022-ம் ஆண்டு அமைத்து அந்த குழுவும் மக்களிடம் கருத்துக்கேட்டு தனது அறிக்கையை பொது சிவில் சட்ட வரைவாக அரசாங்கத்திடம் வழங்கியது. அதன் அடிப்படையில்தான் இந்த மசோதா இப்போது சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில் பழங்குடியினருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் பலதார திருமணத்துக்கு தடைவிதித்துள்ளது, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான விவாகரத்துச்சட்டம், பொதுவான தத்தெடுக்கும் நடைமுறை, பெண்களுக்கு சமமான சொத்துரிமை, எல்லோருக்கும் பொதுவாக பெண்களின் திருமண வயதை 18 என்று நிர்ணயித்தல், திருமணம் செய்யாமல் வாழ்பவர்கள் தங்கள் உறவை ஒரு மாதத்துக்குள் பதிவுசெய்யவேண்டும் என்று சில அம்சங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளன. இப்போது மத்திய அரசாங்கம் மக்களிடம் கருத்துக்கேட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மத்திய அரசாங்கம் நாடு முழுமைக்கும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கும்.

ஏற்கனவே இதுகுறித்து எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய முடியவில்லை. மாநிலத்துக்கு மாநிலம், மதத்துக்கு மதம், இனத்துக்கு இனம் என கலாசாரங்கள், வாழ்க்கைமுறை வித்தியாசமாக இருப்பதால் தேசிய அளவில் எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவருவதற்கு பதிலாக அந்தந்த மாநிலங்களின் முடிவுக்கு விட்டுவிடுவதே உகந்தது என்ற கருத்தும் நிலவுகிறது.

மேலும் செய்திகள்