< Back
தலையங்கம்
கண்ணீர்குறிச்சியாக கள்ளக்குறிச்சி
தலையங்கம்

கண்ணீர்குறிச்சியாக கள்ளக்குறிச்சி

தினத்தந்தி
|
22 Jun 2024 6:31 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த விஷ சாராய சாவுகள் அனைவரையும் கலங்கடித்துவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த விஷ சாராய சாவுகள் அனைவரையும் கலங்கடித்துவிட்டது. இந்த மாவட்டத்துக்கு அருகிலுள்ள கல்வராயன் மலையில் குடிசைத்தொழிலாக யாருக்கும் தெரியாமல் சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து கள்ளக்குறிச்சியில் மற்ற பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு டீ, காபி விற்பதுபோல பல இடங்களில் விற்கப்பட்டது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் இத்தகைய விஷ சாராயத்தைக் குடித்த 50 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும் 86 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி இருவருக்கு இந்த சாராயத்தை குடித்தவுடன் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் இறந்துவிட்டனர். இதைத்தவிர மேலும் 9 பேர் வாந்தி, மயக்கம், கண்பார்வை மங்குதல் போன்ற காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியிலுள்ள சமூகஆர்வலர்கள் இது விஷ சாராயத்தினால் ஏற்பட்ட சாவு என்று செய்திகளை பரப்பினர். ஆனால் மாவட்ட கலெக்டர் விஷ சாராய சாவு அல்ல என்று மறுத்தார். மற்றவர்களுக்கு இது ஒரு தெம்பைக்கொடுத்ததால், ஏற்கனவே விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் வீட்டுக்கு துக்கம் கேட்க சென்றவர்களும், அதனை வாங்கிக்குடித்து, அடுத்த சில நிமிடங்களில் கொத்து கொத்தாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழப்புகளும் தொடர்ந்தன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடி நடவடிக்கை எடுத்தார். உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்களை மருத்துவக்குழுவோடு அங்கு அனுப்பினார். பக்கத்து மாவட்டங்களிலிருந்து டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மாவட்ட கலெக்டர் உடனடியாக இடமாற்றமும், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட மதுவிலக்கு போலீசார் கூண்டோடு சஸ்பெண்டும் செய்யப்பட்டனர். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சமும், சிகிச்சையிலிருப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர், இப்போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.

இந்த சாராயத்தை விற்ற வியாபாரிகள் அதோடு போதைக்காக புதுச்சேரியில் இருந்து மெத்தனாலை வாங்கி வந்து அதில் சேர்த்து விஷ சாராயமாக்கியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. நகராட்சி பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே வெளிப்படையாக விற்பனை நடந்து, கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து குடிக்கும்போது போலீசார் கண்ணுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது? என்பதுதான் எல்லோருடைய கேள்வியாகும். இந்த விஷ சாராயம் 100 மில்லி லிட்டர் ரூ.60-க்கு கிடைப்பதால் டாஸ்மாக் கடைக்கு போகாமல் இந்த விஷ சாராயத்தை குடிக்கிறார்கள். இதனை ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தாலே போதும். 1997 முதல் 2001 வரை மு.ரவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது வாரத்துக்கு இருமுறை பெரும் போலீஸ் படையுடன் கல்வராயன்மலைக்கு சென்று சாராய வேட்டை நடத்தி ஊறல்களையெல்லாம் பேரல், பேரல்களாக அழித்ததால், அந்த நஷ்டத்தை தாங்கமுடியாமல் பலர் இந்த தொழிலையே நிறுத்திவிட்டு ஓடிவிட்டனர். அத்தகைய நடவடிக்கைகள் இப்போது தொடரவேண்டும்.

இதுபோன்ற விஷ சாராய சாவுகள் நடந்ததால்தான், 2002-ல் டாஸ்மாக் கடைகளில் மலிவு விலையில் 100 மில்லி லிட்டர் மது ரூ.15-க்கு விற்பனைக்கு வந்தது. இப்போதும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவகைகளின் விலை கட்டுப்படியாகவில்லை என்பதாலும், விஷ சாராயம் பக்கம் ஏழை மக்கள் போவதை தடுக்கவும் கள், சாராயக்கடைகளை அரசு திறக்கலாம் என்ற எண்ணமும், இத்தகைய சாராயம் குடிப்பவர்கள் மத்தியில் இருக்கிறது. மொத்தத்தில் விஷ சாராய சாவுகள் இனியும் நடக்காமலிருக்க போலீசும், மாவட்ட நிர்வாகமும் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்