< Back
தலையங்கம்
உலகளாவிய வர்த்தகத்தில் நிதி நுட்ப நகரம்!
தலையங்கம்

உலகளாவிய வர்த்தகத்தில் நிதி நுட்ப நகரம்!

தினத்தந்தி
|
6 July 2023 12:49 AM IST

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், அதோடு நிதி சார்ந்த நடவடிக்கைகளும் இணைந்துவிட்டது. ஒரு செல்போனில் உள்ள இணையதளம் மூலமாகவே அனைத்து வங்கி சேவைகளும், வர்த்தக சேவைகளும், நிதி சேவைகளும் ஓரிரு வினாடிகளில் முடிக்கப்பட்டுவிடுகின்றன. பாரம்பரியமாக வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவன சேவைகளை, வளர்ந்துவரும் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் நிதி நுட்பத்துறை, உலகம் முழுவதும் பெரும் வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடும் அந்த வேகத்துக்கு இணையாக தன்னுடைய வளர்ச்சி பாதையை வகுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

நிதி நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட தொழில்கள், தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டு இருக்கின்றன. எப்படி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாக தமிழ்நாடு திகழ்கிறதோ, அதுபோல நிதி நுட்பத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நிதிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதிநுட்பத்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் மாபெரும் வாய்ப்புகள் உள்ளதால், அதை முன்னெடுக்கும் வகையில், சென்னை நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக, நந்தம்பாக்கத்தில் ரூ.370 கோடி மதிப்பில், 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் அமைக்கவும், 5.6 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தொடங்குவதற்கான அலுவலகங்களை உள்ளடக்கிய நிதிநுட்ப கோபுரம் அமைக்கவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.

நிதிநுட்ப நகரம் அமைப்பதன் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். நிதிநுட்ப கோபுரம் அமைக்கப்படுவதன் மூலம் ரூ.1000 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். முதல் நிதிநுட்ப கோபுரத்தை 2025-ம் ஆண்டில் தொடங்கிவிடவேண்டும் என்ற முனைப்பில், தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் மின்னல் வேகத்தில் பணிகளை தொடங்கிவிட்டனர்.

நிதிநுட்ப அலுவலகங்களை எங்கு வேண்டும் என்றாலும் தொடங்கி, உலகில் எந்த மூலையிலும் உள்ள இடங்களோடும், அலுவலையும், வர்த்தகத்தையும் மேற்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, சென்னையில் உள்ள உலக வங்கி கிளையில், வாஷிங்டனில் உள்ள தலைமையகத்துக்கு இணையாக ஊழியர்கள் எண்ணிக்கை இருக்கிறது. இதுபோல, பல சர்வதேச நிதி வங்கிகள், நிதி நிறுவனங்கள் இயங்குகின்றன. சென்னையில் நிதிநுட்ப நகரம், நிதிநுட்ப கோபுரம் அமைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதுபோல, தமிழ்நாட்டில் மேலும் பல நகரங்களிலும் தொடங்கவேண்டும்.

அடுத்த கட்டமாக, குஜராத்தில் நரேந்திரமோடி முதல்-மந்திரியாக இருந்தபோது, அவரது கனவு திட்டமாக உருவாகி இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில், கட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் 'கிப்ட் சிட்டி' (குஜராத் சர்வதேச நிதிநுட்ப நகரம்) போல, ஒரு சர்வதேச நிதிநுட்ப நகரை தமிழ்நாட்டில் உருவாக்க திட்டங்களை தமிழக அரசு தீட்டவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. குஜராத்தில் 'கிப்ட் சிட்டி' முதல் கட்டமாக ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைய இருக்கிறது. உலகளாவிய வர்த்தகத்தின் புகலிடமாக 'கிப்ட் சிட்டி' அமைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது போல, தமிழ்நாட்டையும் உலகளாவிய நிதி நுட்பநகரமாக ஒளிர செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்