ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகள்
|எந்திரமயமாகிப்போன இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில், கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் பல வீடுகளில் ஏற்பட்டுள்ளது.
எந்திரமயமாகிப்போன இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில், கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் பல வீடுகளில் ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் வேலை.. வேலை.. என்று இவர்களின் மனநிலை இருப்பதால், வீட்டில் சமைப்பது என்பது குறைந்து போய் விடுகிறது. உணவு பழக்க வழக்கமும் மாறி, இப்போது துரித உணவுகள் என்று கூறப்படும் "பாஸ்ட் புட்" மக்களை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. சவர்மா, பர்கர், பிட்சா, பிரைடு ரைஸ், சிக்கன் ரைஸ், பாஸ்தா, மோமோ, கிரில்டு சிக்கன் என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த துரித உணவுகள், சாலையோர கடைகளில்கூட அனைவரும் பார்க்கும் வகையில் சமைக்கப்படுகின்றன. அங்கு போய் சாப்பிடுவது மட்டுமல்லாமல், ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுகிறார்கள்.
சவர்மா போன்ற உணவுகளை படித்துக்கொண்டோ, கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக்கொண்டோ, டி.வி. பார்த்துக்கொண்டோ எளிதாக சாப்பிட முடியும் என்பதால், இளைய சமுதாயத்தினர் பெரும்பாலும் இந்த உணவுக்கு அடிமையாகிவிட்டனர். இப்போது தெருவுக்கு தெரு ஏராளமான ஓட்டல்கள், சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள், கையேந்தி பவன்கள் என துரித உணவு விற்பனை கடைகள் பெருகிவிட்டன. இந்த தொழில் ஏராளமானவர்களுக்கு வாழ்வளிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், பல கடைகளில் இந்த அசைவ உணவுகளையெல்லாம் சுகாதாரமற்ற, ஆரோக்கியமற்ற முறைகளில் தயாரிப்பதோடு, கெட்டுப்போன இறைச்சி மற்றும் கோழிக்கறியை அதற்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், நிறைய பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தற்போது அடிக்கடி நடக்கின்றன.
துரித உணவுகளில் சவர்மாவுக்குத்தான் எல்லா ஊர்களிலும் கடும் கிராக்கி இருக்கிறது. சவர்மா ஒரு அரபு உணவு. அரபு மொழியில் சவர்மா என்றால் இறைச்சியை சுழற்றுதல் என்று பொருள். சவர்மாவையும் அப்படித்தான் தயாரிக்கிறார்கள். மசாலா தடவப்பட்ட எலும்புகள் இல்லாத பச்சை இறைச்சி அல்லது கோழிக்கறியை கம்பியில் சொருகி நெருப்பு தணலில் அருகில் சுழல செய்து அது வெந்தவுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மேலும் சில மசாலா கலவைகளுடன் சுடப்பட்ட ரொட்டியில் வைத்து உருட்டி சாப்பிடுவதுதான் சவர்மா. சமீபத்தில் நாமக்கல்லில் சவர்மாவை குடும்பத்துடன் சாப்பிட்ட கலையரசி என்ற 14 வயது பள்ளி மாணவி உயிரிழந்தார். இதுபோல, கேரளாவிலும் தேவநந்தா என்ற 16 வயது பிளஸ்-1 மாணவியும் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்துள்ளார்.
இதுதவிர, ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் சிலர் சவர்மா சாப்பிட்டவுடன் மயக்கம் ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தனர். இதேபோல், நாமக்கல்லில் பர்கர் சாப்பிட்ட மாணவரும், கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 தொழிலாளர்களும் வாந்தி-பேதியால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற தொடர் சம்பவங்களால், தமிழ்நாடு முழுவதும் இப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவு விடுதிகளில் சோதனையிட்டு, கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடக்க வேண்டும். ஓட்டல் உரிமையாளர்களும் கெட்டுப்போன இறைச்சியைக் கொண்டு உணவு தயாரிக்கக்கூடாது. பொதுமக்களும், கூடுமான வரையில் துரித உணவு வகைகள் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். சமீபத்தில் இரைப்பை, குடல் சிகிச்சை நிபுணரான டாக்டர் கே.ஆர்.பழனிசாமி, இத்தகைய துரித உணவுகள்தான் அனைத்து உடல்நல சீர்கேட்டுக்கும் ஆணி வேராக இருப்பதாக கூறியதை அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும்.