< Back
தலையங்கம்
இது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெற்றி!
தலையங்கம்

இது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெற்றி!

தினத்தந்தி
|
3 March 2023 1:05 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வெற்றி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெற்றி. அவர் தலைமையிலான தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி. தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி.

ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு வெளிவந்துவிட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா, காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, சற்றேறக்குறைய 9 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொகுதி மக்களின் அன்பைப் பெற்ற வகையில், பம்பரமாக சுழன்று பணியாற்றினார். ஆனால், அவர் 46 வயது நிரம்பிய நிலையிலேயே உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.

பொதுவாக, ஒரு கணவன் சட்டமன்ற உறுப்பினராக இருந்து காலமானால், இடைத்தேர்தலின்போது அவர் மனைவி வேட்பாளராக நிறுத்தப்படுவதும், தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருந்து காலமானால், அவருடைய மகன் வேட்பாளராக நிறுத்தப்படுவதும் வழக்கம். ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியிலுள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 238. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 547. இதில், 74.79 சதவீதம் அதாவது, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 603 பேர் வாக்களித்தனர். நேற்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

தபால் ஓட்டுகளைத் தொடர்ந்து, ஒவ்வொரு சுற்றிலுமே காங்கிரஸ் வேட்பாளர்தான் முன்னிலை வகித்தார். இறுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று இமாலய வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றார். 3-வது இடத்துக்கு வருவது, நாம் தமிழர் கட்சியா?, விஜயகாந்தின் தே.மு.தி.க.வா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நேரத்தில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 10,827 வாக்குகளும், தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 1,432 வாக்குகளும் பெற்று டெபாசிட்டை இழந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நடந்தது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் போட்டியிட்டாலும், தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் நடந்த போட்டியாகவே மக்கள் பார்த்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து அமைச்சர்களையும், கட்சி நிர்வாகிகளையும் களத்தில் இறக்கினார். ஒவ்வொருவருக்கும் பகுதிகள் பிரித்துக்கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு தி.மு.க. தொண்டரும், கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும் தாங்கள்தான் வேட்பாளர் என்பது போல, தேர்தல் பணியாற்றினர். ஒவ்வொரு நாளும் எங்கே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெலிபோன் அழைப்பு வரப்போகிறதோ? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அளவுக்கு, தினமும் இரவு எல்லோருடனும் தேர்தல் பணி பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கடைசி நாள் தேர்தல் பிரசாரத்தில் பேசும்போதும், "சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஆட்சிதான் தி.மு.க.வின் ஆட்சி. இதை இடைத்தேர்தல் என்று பார்க்காமல் எடை போடக்கூடிய தேர்தலாக பாருங்கள். இந்த ஆட்சி செய்திருக்கக்கூடிய சாதனைகளுக்கு நீங்கள் எல்லாம் அங்கீகாரம் தந்திடவேண்டும் என்று சொன்னால், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மிகப்பெரிய வெற்றியை உருவாக்கித்தர வேண்டும்" என்று பேசினார்.

ஆக, இப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வெற்றி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெற்றி. அவர் தலைமையிலான தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி. தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி.

மேலும் செய்திகள்