போதும் இது போதும்!
|மகாத்மா காந்தி, “ஒரு பெண் நள்ளிரவில் 12 மணிக்கு தன்னந்தனியாக பயமில்லாமல் சாலையில் நடந்து செல்லும் நாள் என்னாளோ, அந்த நாள்தான் உண்மையான சுதந்திரம் அடைந்தநாள்” என்று கூறினார்.
சென்னை,
பெண்களின் பாதுகாப்பு, குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஒட்டுமொத்த நாடே கவலையால் அதிர்ந்து போய் நிற்கிறது. நமக்கு சுதந்திரம் வாங்கித்தந்த 'தேசப்பிதா' மகாத்மா காந்திகூட, "ஒரு பெண் நள்ளிரவில் 12 மணிக்கு தன்னந்தனியாக பயமில்லாமல் சாலையில் நடந்து செல்லும் நாள் என்னாளோ, அந்த நாள்தான் உண்மையான சுதந்திரம் அடைந்தநாள்" என்று கூறினார். அந்த நாள் இன்னும் வரவில்லை. சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு அரசு மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த 31 வயது பயிற்சி டாக்டர், கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்தது அந்த மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு மண்டபத்தில்தான். 36 மணி நேரம் தொடர் பணியில் இருந்த அந்த பெண் டாக்டர், சற்று ஓய்வு எடுப்பதற்காக கருத்தரங்கு மண்டபத்துக்கு சென்று இருந்த நேரத்தில் இந்த கொடூரம் நடந்திருக்கிறது. அந்த கொலையை செய்தது போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராவ் என்று கூறப்பட்டாலும், அவர் ஒருவர் மட்டுமா? அல்லது இன்னும் பலர் கூட்டு சேர்ந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றினார்களா? என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுபோல, தமிழ்நாட்டிலும் கிருஷ்ணகிரியில் நடந்த ஒரு போலி என்.சி.சி. முகாமில் 8-வது படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மராட்டிய மாநிலம் பத்லாப்பூரிலும் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். ஆக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி டாக்டருக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
நாட்டில் மொத்தம் உள்ள டாக்டர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள். பல் டாக்டர்களில் 68 சதவீதம் பேரும், பிசியோதெரபியில் 75 சதவீதம் பேரும், நர்சுகளில் 85 சதவீதம் பேரும் பெண்கள். இப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், மருத்துவமனைகளில் டாக்டர்களின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசாங்கம் சில யோசனைகளை கூறியுள்ளது. இதற்கு தனியாக ஒரு மத்திய சட்டம் வேண்டும் என்று சில கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால், மருத்துவமும், சட்டம்-ஒழுங்கும் மாநில பட்டியலில்தான் இருக்கிறது.
தமிழ்நாடு உள்பட 26 மாநில மருத்துவமனைகளில் டாக்டர்களின் பாதுகாப்புக்காக தனி சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதில் கடும் தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவுகள் இருக்கின்றன. ஆங்காங்கு நடக்கும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், குறித்த நேரத்தில் புலன்விசாரணை முடியாததால், தண்டனை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, மொத்த கற்பழிப்பு வழக்குகளில் 2.56 சதவீதம்தான் தண்டனை கிடைக்கிறது. அதுவும், கற்பழிப்பு முயற்சி வழக்குகளில் 0.92 சதவீதம்தான் தண்டனை கிடைக்கிறது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு சொன்னதுபோல, இத்தகைய வழக்குகளில் சம்பவங்கள் நடக்கும்போது அதுபற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. பிறகு கொஞ்ச காலத்தில் ஞாபக மறதி ஏற்பட்டு மறந்துவிடுகிறோம். அடுத்த சம்பவம் நடக்கும்போதுதான் பெண்கள் பாதுகாப்புக்கான உணர்வு மீண்டும் எழுகிறது. போதும் இது போதும். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ? அத்தனை நடவடிக்கைகளையும் மத்திய-மாநில அரசுகள் தொடர் நடவடிக்கையாக எடுக்கவேண்டும்.