ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கட்டுமே!
|இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலமும் நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழி காப்பாற்றப்படவேண்டும்.
மொழி என்பது தேன்கூடு போன்றதாகும். அதில் அதிமதுரமான தேனும் இருக்கும். தேவையில்லாமல் சீண்டினால் ஆயிரக்கணக்கான தேனீக்கள் வந்து கொட்டவும் செய்யும். அந்த வலி நரக வேதனையாக இருக்கும். தமிழ்நாட்டில் தமிழ்மொழியை தாய்க்கு நிகராக, உயிருக்கு மேலாக கருதும் உணர்வு இன்னும் மங்கிப்போய்விடவில்லை. இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. சுதந்திரம் அடைந்ததற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தந்தை பெரியாரும் மற்றும் தமிழைக்காக்க பாடுபட்ட தலைவர்களும் ஏற்றிவைத்த தீபம் இன்னும் அணையாமல் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
இந்தியை எதிர்த்து கருணாநிதி, தன் 14 வயதில் திருவாரூர் வீதிகளில், "ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடிவந்த கோழை நாடு இதுவல்லவே" என்று முழக்கமிட்டது இன்றும் மங்கிவிடவில்லை. 1967-ல் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்த்து அண்ணா தலைமையிலான தி.மு.க. நடத்திய போராட்டங்களைத்தொடர்ந்து நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, இன்றுவரை திராவிட கட்சிகளால் மட்டுமே ஆட்சியில் அமர முடிகிறது.
இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் அமைந்த அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு தனது 11-வது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அளித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகள் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. "இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐ.ஐ.டி., எய்ம்ஸ், ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களிலும் இந்திதான் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளூர் மொழிகள் பயிற்று மொழியாக இருக்கவேண்டும். முழுமையாக தேவைப்படும் இடங்களில்தான் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கலாம். ஆனால், படிப்படியாக அத்தகைய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி இடம் பெறவேண்டும். ஐக்கிய நாடுகளில் இந்தியும் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருக்கவேண்டும். அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலத்துக்கு மேலாக உள்ளூர் மொழிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். பட்ஜெட்டில் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் 50 சதவீத தொகை இந்தி விளம்பரங்களுக்கே செலவழிக்கப்படவேண்டும். 'ஏ' பிரிவு மாநிலங்களில் இந்திக்கு மதிப்புமிகு இடம் அளிக்கப்படவேண்டும். அங்கு 100 சதவீத பயன்பாடு இருக்கவேண்டும். வேலைகளுக்கான நியமனங்களில் கட்டாயமாக ஆங்கில மொழி வினாத்தாள்கள் இருப்பதைக் கைவிடவேண்டும். மத்திய அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள், துறைகளின் கடிதங்கள், மின்னஞ்சல்கள் இந்தியிலும், உள்ளூர் மொழிகளிலும் இருக்கவேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளின் உத்தரவுகளை இந்தியில் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்யவேண்டும்" என்பதுபோன்ற, இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பல பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் உள்ள நாடு. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி தாய்மொழியாக இருக்கிறது. அனைத்து மாநிலங்களையும் ஒன்று சேர்க்கும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க முடியும். மேலும், உயர்கல்வி படித்த அனைவரும் இந்தி அல்லது மாநில மொழிகளில் மட்டுமே படித்தால், அந்தந்த மாநிலத்தைத்தாண்டி மற்ற மாநிலங்களிலோ, குறிப்பாக வெளிநாடுகளிலோ வேலை வாய்ப்புகளைப் பெற முடியாது. உயர் படிப்புகளுக்கான பாடப்புத்தகங்களெல்லாம் சர்வதேச தரத்தில் இருக்கவேண்டும் என்றால், ஆங்கிலத்தில் இருந்தால் மட்டுமே முடியும். இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இந்தி, தமிழ் உள்பட 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமை பெற்ற மாநிலங்கள். இந்தநிலையில், இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் ஏன்?, இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலமும் நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழி காப்பாற்றப்படவேண்டும். இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் ஜனாதிபதி கையில்தான் இருக்கிறது என்ற வகையில், அனைவரும் இது வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுப்பது சாலச் சிறந்ததாகும்.