என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு கடும் கிராக்கி
|என்ஜினீயரிங் படித்து முடித்தால், ஏதாவது வேலை கிடைத்துவிடும் என்ற உணர்வு இளம்வயதினரிடம் மேலோங்கி இருப்பதால், இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
சீ ட்டு விளையாட்டில் ஒரு கட்டுக்கு 52 கார்டுகள் இருக்கும். 2 பேர் விளையாட முடியும். இந்த சீட்டு கட்டில் 2 ஜோக்கர் கார்டுகள் இருக்கும். கலைத்துப் போடும்போது யாருக்கு அந்த 2 ஜோக்கர் கார்டுகள் வருகிறதோ அவருக்கே வெற்றிவாய்ப்பு பிரகாசமாக அமையும். ஏனெனில், ஜோக்கர் கார்டை எந்த கார்டுடனும் சேர்த்துக்கொள்ள முடியும். அதுபோலத்தான் வேலைவாய்ப்பு என்ற சீட்டு விளையாட்டிலும் ஜோக்கர் கார்டாக என்ஜினீயரிங் பட்டம் கருதப்படுகிறது.
என்ஜினீயரிங் தொடர்பான வேலைவாய்ப்புகளில் மட்டுமல்லாமல், போலீஸ்காரர், தபால்காரர், கிராம நிர்வாக அலுவலர் முதல் அனைத்து அரசு பணிகள், அது மத்திய-மாநில அரசு பணிகள் எதுவாக இருந்தாலும், அதில் சேரமுடியும் என்பதால், இப்போதெல்லாம் பிளஸ்-2 படித்தவர்களின் முதல் தேர்வு, என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்துவிடவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.
இதற்கு வசதியாக, இப்போது அரசு பள்ளிக்கூடங்களில் படித்தவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், மேலும் அதிக மாணவர்கள் சேர முன்வருகிறார்கள். இதுபோன்ற பல காரணங்களால், குறிப்பாக என்ஜினீயரிங் படித்து முடித்தால், ஏதாவது வேலை கிடைத்துவிடும் என்ற உணர்வு இளம்வயதினரிடம் மேலோங்கி இருப்பதால், இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 431 என்ஜினீயரிங் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் 394 கல்லூரிகள் தனியார் நடத்தும் சுயநிதி கல்லூரிகளாகும். அரசு கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில்தான் மாணவர்கள் சேரமுடியும். சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட சதவீதமும், நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் ஒரு குறிப்பிட்ட சதவீதமும் இடங்கள் இருக்கின்றன. அரசு ஒதுக்கீட்டில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் நடத்தும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆனால் நிர்வாக ஒதுக்கீட்டில் அந்த கலந்தாய்வுக்குச் செல்லாமலேயே சேர்ந்துவிட முடியும்.
அனைத்து கல்லூரிகளிலும், இரு ஒதுக்கீடுகளையும் சேர்த்து ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 389 இடங்கள் இருக்கின்றன. இதில் கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இதற்கு ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 157 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மாணவர்கள் 95 ஆயிரத்து 397 பேர். மாணவிகள் 62 ஆயிரத்து 750 பேர். மூன்றாம் பாலினத்தவர் 10 பேர். மொத்த இடங்களைவிட கூடுதலான மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணப்பித்து இருக்கின்றனர். கடந்த 2020-2021-ல் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 50 ஆயிரம் இடங்களுக்கு மேல் காலியாக இருந்தது. பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாததால், அவை மூடப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. இந்த ஆண்டு அந்த நிலைமாறி மொத்த இடங்களைவிட அதிகமான மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வருகிறார்கள்.
ஆக, கையில் இருக்கும் இடங்களைவிட சேரவரும் மாணவர்கள் அதிகம் என்ற நிலையில், இந்தப் படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளது. அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு மூலம் சேருவதற்கு இவ்வளவு மாணவர்கள் திரண்டுவந்து இருப்பதை பார்த்து, என்ஜினீயரிங் கல்லூரியில் சேரவேண்டாம் என்ற முடிவில் இருந்த மாணவர்கள்கூட, இப்போது சுயநிதி கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் சேரவேண்டும் என்ற முடிவில் உள்ளனர்.
தொழில்நுட்ப இயக்ககம் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், முதல் 10 பேரில் 5 மாணவர்கள், 5 மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களில், அரசு பள்ளிக்கூடத்தில் படித்த மாணவி பிரிந்தாவும் ஒருவர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மொத்தத்தில், இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கு, பல ஆண்டுகளுக்கு பிறகு இருக்கும் மவுசு போல, அதன் தரமும் உயரவேண்டும் என்பதே சமுதாயத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.