< Back
தலையங்கம்
வேலை வாய்ப்புக்குத்தான் முன்னுரிமை
தலையங்கம்

வேலை வாய்ப்புக்குத்தான் முன்னுரிமை

தினத்தந்தி
|
15 Aug 2024 7:44 PM IST

காற்றாலை மின் உற்பத்திக்கும், சூரியவெப்பமின்சக்திக்கும் தமிழ்நாட்டின் தட்பவெப்பசூழ்நிலை மிக நல்ல வாய்ப்பாக இருப்பதால், அதில் தமிழக அரசு தீவிரகவனம் செலுத்துகிறது.

முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் அதாவது, ரூ,83 லட்சம் கோடிக்கான பொருளாதார மாநிலமாக மாற்றிக்காட்டுவேன், அதையும் 2030-க்குள் நிறைவேற்றுவேன் என்று சூளுரைத்து, அந்த இலக்கை அடையும் வகையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இந்த அளவுக்கு வளர்ச்சி அடைய வேண்டுமானால் தொழில்வளர்ச்சி மிக மிக முக்கியமாகும். அதற்கு நிறைய தொழில்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட வேண்டும். நிறைய முதலீடுகளை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து கொண்டுவர முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத் தலைவரான கூடுதல் தலைமை செயலாளர் ராஜேஷ் லக்கானி, தொழில் வழிகாட்டு நிறுவன நிர்வாக இயக்குனர் விஷ்ணு என்று உயர்அதிகாரிகள் கொண்ட ஒரு பட்டாளமே களத்தில் இறங்கியுள்ளது.

இப்போது ஆந்திரா உள்பட சில மாநிலங்கள் தமிழ்நாட்டுக்கு பலத்த போட்டியாக இருக்கும் சூழ்நிலையில், முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு மிகத்தீவிரமான முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. வருகிற 27-ம் தேதி, முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஒரு குழு அமெரிக்கா செல்கிறது. அங்கு புகழ்பெற்ற தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினால் என்னென்ன சலுகைகள், உதவிகள் அரசின் சார்பில் வழங்கப்படும் என்று விளக்கி அழைப்புவிட இருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஒரு நல்ல செய்தியாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தொழில்துறை சார்பில் 24,700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ,44,125 கோடி முதலீட்டுக்கான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் இந்த அமைச்சரவை கூட்டத்தில் நீரேற்று, சிறிய நீர் மின்சார நிலையங்கள் தொடங்குவதற்கான திட்டங்கள், தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை-2024-க்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த 15 தொழிற்சாலைகளும் தூத்துக்குடி, காஞ்சீபுரம், ஈரோடு, கிருஷ்ணகிரி போன்ற பல இடங்களில் பரவலாக தொடங்கப்பட இருக்கிறது. இந்த முதலீடுகளெல்லாம் வாகன உற்பத்தி, மின்னணு பொருட்கள் மற்றும் உணவுப் பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பொருட்கள், பேட்டரி உற்பத்தி, மின்கல உற்பத்தி ஆகிய தொழில்கள் குறித்ததாக இருக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

காற்றாலை மின் உற்பத்திக்கும், சூரியவெப்பமின்சக்திக்கும் தமிழ்நாட்டின் தட்பவெப்பசூழ்நிலை மிக நல்ல வாய்ப்பாக இருப்பதால், அதில் தமிழக அரசு தீவிரகவனம் செலுத்துகிறது. குறிப்பாக இப்போது வகுக்கப்பட்ட கொள்கைகள் தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தியை இன்னும் 25 சதவீதம் உயர்த்தவும், பசுமை எரிசக்தி உற்பத்தியை 2030-க்குள் 50 சதவீதம் உயர்த்தவும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. முதல்-அமைச்சர் மு க ஸ்டாலினை பொறுத்தமட்டில், தமிழகத்துக்கு எவ்வளவு நிதி வருகிறது? என்பதைவிட எவ்வளவு வேலைவாய்ப்புகள் வருகிறது? என்பதுதான் குறிக்கோளாக இருக்கிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சொன்னது, இளைஞர்களுக்கு பெரிதும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பை முன்னுரிமையாகக் கொண்டு பரவலாக தொழில்கள் தொடங்க அனுமதி அளிக்கும் முயற்சிகள் தொடரவேண்டும், இன்னும் வேகம் எடுக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. சென்னையை மட்டுமே சுற்றி இருந்த தொழில் வளர்ச்சி என்ற பறவை, இப்போது தன் சிறகை, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிக்க தொடங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்