துள்ளி வருகுது தொழில் முதலீடுகள்
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடந்த 2 ஆண்டுகால ஆட்சி, ‘தொழில்வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பொற்காலம்’ என்று கூறினால் அது மிகையாகாது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடந்த 2 ஆண்டுகால ஆட்சி, 'தொழில்வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பொற்காலம்' என்று கூறினால் அது மிகையாகாது. ஏனெனில், ஒவ்வொரு மாதமும் ஏராளமான தொழில்முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன. இந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.2.95 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் செய்வதற்காக 226 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவையெல்லாம் செயலுக்கு வரும்போது 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எங்களை நீங்கள் தொழில் முதலீட்டுக்காக தேடிவரவேண்டும் என்று இல்லாமல், நாங்கள் உங்களைத்தேடி வருகிறோம் என்று கூறும் அளவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குனராக முன்பு இருந்த பூஜா குல்கர்னி, இப்போது அந்த பதவியில் இருக்கும் விஷ்ணு ஆகியோர் பல நாடுகளுக்கு சென்றதால் புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
பலதரப்பட்ட உற்பத்தி தொழில் நிறுவனங்களை கணக்கிட்டால் ஆசியாவின் 'டெட்ராய்டு' தமிழ்நாடு என்றே அழைக்கக்கூடிய அளவில் இருக்கிறது. அந்தஅளவில் சர்வதேச கனரக தொழில்நிறுவனங்கள், மினி தொழிற்பூங்காக்கள் முதல் ஏராளமான குறு, சிறு, நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் பரவலாக தமிழ்நாட்டில் இருக்கின்றன. இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த மோட்டார் உதிரிபாகங்களில் 35 சதவீதம் தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. கார் உள்பட மோட்டார் வாகன உற்பத்தியில் பல புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் மின்னணு தொழில்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காலணி குறிப்பாக தோல் அல்லாத காலணி உற்பத்தியிலும் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் மிக அதிகமாக தமிழ்நாட்டில் தொழில்முனைவோர்களாகியிருக்கிறார்கள். அதுபோல பெண்கள் தொழில் தொடங்குவதற்கும், சென்னையை சுற்றிலும் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் பரவலாக தொழில்வளர்ச்சி அடைய சிறப்பு ஊக்கமும் வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில், தொழில் தொடங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அரசால் வழங்கப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ரூ.40 ஆயிரம் கோடி முதலீடுகளுக்கான 6 தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 2-ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தூத்துக்குடியில், மலேசியா நாட்டை சேர்ந்த பெட்ரோனாஸ் நிறுவனத்தால் ரூ.34 ஆயிரம் கோடி செலவில் அமையவிருக்கும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொழில் உள்பட மேலும் சில தொழில்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பெருவாயலில் ரூ.1,891 கோடி செலவில் அமைய இருக்கும் 'மிட்சுபிஷி' நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி தொடங்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம், சிஸ்கோ என பல நிறுவனங்கள் வரிசைகட்டி தமிழ்நாட்டில் தொழில் தொடங்க இருக்கின்றன. மேலும் இன்று சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு செல்லும் முதல்-அமைச்சர் அங்கும் தொழில்முனைவோரை சந்தித்து தமிழ்நாட்டுக்கு அழைப்பு விடுக்கிறார். 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும், தொழில் முதலீடுகள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று தமிழ்நாடு அவரை வாழ்த்துகிறது. இதே வேகத்தில் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி இருந்தால் இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் முதல் இடத்துக்கு தமிழ்நாடு வந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை.