< Back
தலையங்கம்
தமிழ்நாட்டில் மின்சார வாகன புரட்சி!
தலையங்கம்

தமிழ்நாட்டில் மின்சார வாகன புரட்சி!

தினத்தந்தி
|
10 Oct 2023 12:48 AM IST

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மின்சார வாகன தலைநகரமாக உருவாக்கிவிடவேண்டும் என்ற இலக்கில் தமிழக அரசு அதை அடைவதற்கான உற்பத்தி சூழ்நிலைகளை உருவாக்கிவருகிறது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்பதால் உலகம் முழுவதுமே இப்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் வாகன இயக்கத்துக்கு 85 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு பெட்ரோல்-டீசல் தேவை அதிகரித்துக்கொண்டு இருப்பதால் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவும் கூடிக்கொண்டே செல்கிறது. விலையும் அதிகரித்து வருகிறது. கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அந்நிய செலாவணியும் அதிகமாக செலவாகி பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே இதற்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாடு மட்டுமல்லாமல் உற்பத்தியும் ஊக்குவிக்கப்படுகிறது. இதன்மூலம் பெட்ரோல்-டீசல் தேவை குறைவதோடு வாகன உரிமையாளர்களுக்கு செலவும் மிச்சமாகிறது. எனவேதான் மத்திய அரசாங்கமும் தமிழக அரசும் மின்சார வாகனங்களின் உற்பத்திக்கும் அதை வாங்குபவர்களுக்கும் பல சலுகைகளை அளித்துவருகின்றன. தமிழக அரசு மின்சார வாகனங்களுக்காக தனியாக ஒரு கொள்கையை வகுத்துள்ளது. மின்சார வாகனங்களின் 'நம்பர் பிளேட்' மற்ற வாகனங்களின் 'நம்பர் பிளேட்' போல இல்லாமல் பச்சை நிறத்தில் இருக்கும். அதைப்பார்த்த உடனேயே இது மின்சார வாகனம் என்று கண்டுபிடித்துவிட முடியும்.

மின்சார வாகனங்களின் விலை மற்ற வாகனங்களின் விலையைவிட அதிகமாக இருப்பதன் காரணம் இதில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிதான். இந்த பேட்டரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கிறது. இப்போது மத்திய அரசாங்கம் ஜம்மு-காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம் படிவங்களை வெட்டி எடுப்பதற்கு ஏலம்விடும் முயற்சியிலும் அர்ஜெண்டினா நாட்டில் லித்தியம் சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. இந்த முயற்சிகளெல்லாம் வெற்றி பெற்றால் லித்தியம் பேட்டரி விலை குறையும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக அரசு மின்சார வாகன தொழிற்சாலைகளை அதிக அளவில் தமிழ்நாட்டில் தொடங்கவும் பொதுமக்களிடம் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் எடுத்த முயற்சி நல்ல பலனை கொடுத்துள்ளது. இந்த ஆண்டு இருசக்கர மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்கள் கார்கள் விற்பனையை எடுத்துக்கொண்டால் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி வரையில் 10 லட்சத்து 44 ஆயிரத்து 600 வாகனங்கள் விற்பனையாகி பெரிய சாதனை படைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு என்ன பெருமையென்றால் இதில் 40 சதவீதத்துக்கும் மேலான அதாவது 4 லட்சத்து 10 ஆயிரம் மின்சார வாகனங்கள் இங்கு தயாரிக்கப்பட்டவை. கிருஷ்ணகிரி ராணிப்பேட்டை காஞ்சீபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இந்த மின்சார வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சென்னை கோயம்புத்தூர் திருச்சி மதுரை சேலம் திருநெல்வேலி ஆகிய 6 நகரங்களை மின்சார வாகனங்களின் கேந்திரமாக உருவாக்க அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மின்சார வாகன தலைநகரமாக உருவாக்கிவிடவேண்டும் என்ற இலக்கில் தமிழக அரசு அதை அடைவதற்கான உற்பத்தி சூழ்நிலைகளை உருவாக்கிவருகிறது. ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில் 2025-ம் ஆண்டில் மிகப்பெரிய மின்சார வாகன தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட இருக்கின்றன. இதன் மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மின்சார வாகன தொழிலில் தமிழ்நாட்டில் ஒரு புரட்சி உருவாகி வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

மேலும் செய்திகள்