< Back
தலையங்கம்
தேர்தல் பரிசா? ரக்ஷா பந்தன் பரிசா?
தலையங்கம்

தேர்தல் பரிசா? ரக்ஷா பந்தன் பரிசா?

தினத்தந்தி
|
31 Aug 2023 1:11 AM IST

ஒவ்வொரு மாதமும், ஏன் ஒவ்வொரு நாளும் விலைவாசியை அடிப்படையாக வைத்தே இல்லத்தரசிகள் பட்ஜெட் போட்டு செலவழிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதில் சில பொருட்கள் விலை உயர்ந்தாலும் அதை தவிர்க்கவும் முடியாது, பயன்பாட்டை குறைக்கவும் முடியாது. அப்படிப்பட்ட பொருட்களின் வரிசையில் முன்னணியில் இருப்பது, சமையல் கியாஸ் சிலிண்டர்தான். விலை உயர்ந்தால், அய்யோ! இப்படி விலை உயர்ந்துவிட்டதே! எங்களால் சமாளிக்க முடியாதே! என்று குறைபட்டுக்கொள்வார்களே தவிர, சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்காமல் இருப்பதில்லை, இருக்கவும் முடியாது.

தற்போது சமையல் கியாஸ் சிலிண்டர் உள்பட அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்திருக்கிறது. அதிலும் உணவுப்பொருட்கள் விலை உயர்வால், நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண் 7.4 சதவீதமாக இருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, பெரும்பாலான குடும்பங்களில் குறிப்பாக ஏழை-எளிய, நடுத்தர குடும்பங்களில் வலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15-ந்தேதி சுதந்திரத்தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, 'விலைவாசி உயர்வினால் என் நாட்டு மக்கள் மீது விழுந்துள்ள சுமையை குறைக்க நான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து அந்த நடவடிக்கையை எடுப்போம். என் முயற்சிகள் தொடரும்' என்றார்.

தான் சொன்னதை செய்யும் விதமாக விலைவாசியை குறைக்க சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை சிலிண்டருக்கு ரூ.200 குறைத்துள்ளார். நேற்றுமுன்தினம் ஓணம் பண்டிகை கேரள மக்களால் கொண்டாடப்பட்டது. நேற்று சகோதர பாசத்தை வெளிக்காட்டும் வகையில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கும், சகோதரர்களாக நினைப்பவர்களுக்கும் கைகளில் ராக்கி கயிறு கட்டும் 'ரக்ஷா பந்தன்' பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நல்ல நாளில் தங்கள் சகோதரிகளுக்கு, சகோதரர்களும் பரிசுகள் வழங்குவார்கள். அந்தவகையில் இல்லத்தரசிகளுக்கு ஒரு சகோதரன் பரிசளிப்பதுபோல, பிரதமர் மோடி நாட்டில் உள்ள 33 கோடி சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகளுக்கும், சிலிண்டருக்கு ரூ.200 குறைத்துள்ளார்.

இந்த 33 கோடியில் 9.60 கோடி பேர் பிரதமரின் 'உஜ்வாலா யோஜனா' இணைப்பு பெற்றவர்கள். வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கும் திட்டம்தான் உஜ்வாலா யோஜனா திட்டம். இவர்களுக்கு ஏற்கனவே சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுகிறது. இப்போது இந்த ரூ.200-ஐ சேர்த்தால் அவர்களுக்கு ரூ.400 மானியமாக கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், கூடுதலாக 75 லட்சம் ஏழை பெண்களுக்கு உஜ்வாலா இணைப்புகள் வழங்கவும் அரசு முடிவெடுத்துள்ளது, ஏழை பெண்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு இது ஒரு பரிசு என்று பிரதமர் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சியினர் இது வரப்போகும் 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலை மனதில் நினைத்து குறைக்கப்பட்ட விலையாகும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வரப்போகிறது, அதற்காகத்தான் இந்த விலை குறைப்பு என்றும் கூறுகிறார்கள். மக்களை பொறுத்தவரையில், தேர்தலுக்காக என்றாலும் சரி, ரக்ஷா பந்தன் பரிசு என்றாலும் சரி அவர்களுக்கு இந்த சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுபோல விரைவில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்கள். அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்