மரபை மீறிய நடைமுறை
|கவர்னர் வரைவு உரை தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டு உரையை சிறிதும் மாற்றமில்லாமல் கவர்னர் சட்டசபையில் அப்படியே வாசிப்பதுதான் மரபாகும்.
சட்டமன்றம் என்றாலும் சரி, நீதிமன்றம் என்றாலும் சரி எப்போதுமே மரபுகள் காப்பாற்றப்படவேண்டும். மரபுகள் என்பது காலம் காலமாக பின்பற்றப்படும் ஒன்றாகும். அந்த வகையில், தமிழக சட்டசபை இதுவரையில் சில அசம்பாவித சம்பவங்களைக் கண்டிருந்தாலும், பொதுவாக மரபுகள் காப்பாற்றப்படும் சட்டசபையாகவே இருந்திருக்கிறது. அந்த பெருமை தமிழக சட்டசபைக்கு உண்டு. ஆனால், நேற்று முன்தினம் நடந்த சட்டசபை கூட்டத்தில், கவர்னர் உரையின்போது மரபுகள் மீறப்பட்டுள்ள நிலை அனைவருக்கும் வருத்தம் அளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு கவர்னர் உரை இருப்பதும், ஆங்கிலத்தில் கவர்னர் உரை ஆற்றுவதும், அதைத்தொடர்ந்து, அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் படிப்பதும், அடுத்த நாள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதம் நடப்பதும், அந்த விவாதத்துக்கு முதல்-அமைச்சர் பதிலளித்து பேசுவதும் வழக்கம். கவர்னர் வரைவு உரை தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டு, அது கவர்னருக்கு அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்ட பிறகே கவர்னர் உரை தயாரிக்கப்படும். அந்த உரையை சிறிதும் மாற்றமில்லாமல் கவர்னர் சட்டசபையில் அப்படியே வாசிப்பதுதான் மரபாகும்.
ஆனால், சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி தன் உரையை தொடங்கியவுடனேயே அனைத்து உறுப்பினர்களும் கம்ப்யூட்டர் தொடு திரையில் பார்த்துக்கொண்டிருந்த உரையில், பல வாசகங்களை விட்டுவிட்டு அடுத்த பாராவில் உள்ள வாசகங்களை படித்ததும், இறுதியாக பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட உரை பிரதியை படிக்கும்போது சில வாசகங்களை கவர்னர் படிக்கவில்லை என்று அறிந்த நேரத்திலும் அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், உரையில் இடம்பெறாமல் இருந்த சில வாசகங்களையும் கவர்னர் கூறினார். அவர் படித்து முடித்தவுடன் சபாநாயகர் அப்பாவு தமிழாக்கத்தை படித்தார். அவர் உரையில் இருந்த வாசகங்களை அப்படியே படித்தார். கவர்னர் உரையாற்றும்போது சேர்த்து படித்த வாசகங்கள் சபாநாயகர் வாசித்த உரையில் சேர்க்கப்படவில்லை. எதை கவர்னர் உரையென்று ஏற்றுக்கொள்வது? கவர்னர் ஆற்றிய உரையா? சபாநாயகரின் தமிழாக்க உரையா? என்ற குழப்பம் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டது.
வழக்கமாக, சபாநாயகர் உரையை படித்தவுடன் தேசியகீதம் இசைக்கப்பட்டு அதன்பிறகு கவர்னர் புறப்பட்டு செல்வார். சபாநாயகர் அவருடன் சென்று வழியனுப்பிவைப்பார். கவர்னர் செல்லும்போது, அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவிப்பார்கள். கவர்னரும் வணக்கம் தெரிவித்துக்கொண்டே வெளியே செல்வார். இதுதான் மரபு. ஆனால், நேற்று முன்தினம் சபாநாயகர் உரையைப் படித்துமுடித்தவுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தில் கவர்னரின் செயல் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றாகும். எனவே, விதியை தளர்த்தி ஏற்கனவே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு சபாநாயகர் படித்த உரையே அவைக்குறிப்பில் ஏறவேண்டும், அச்சிடப்பட்ட பகுதிகளுக்கு மாறாக கவர்னர் இணைத்து, விடுத்த பகுதிகள் இடம்பெறாது என்று குறிப்பிட்டு இருந்தார், அந்த தீர்மானம் நிறைவேறியது.
முதல்-அமைச்சர் பேச தொடங்கியவுடன் அ.தி.மு.க., பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதைப்பார்த்த கவர்னர் முதல்-அமைச்சர் என்ன பேசுகிறார்? என்று தன் செயலாளரிடம் கேட்டுவிட்டு, திடீரென்று தேசியகீதம் பாடுவதற்கு முன்பே அவையைவிட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டார். அவருடன் சபாநாயகரும் செல்லவில்லை. மொத்தத்தில் தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது பல மரபுகள் மீறப்பட்டது வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பதிவிடப்பட்டுவிட்டது.