< Back
தலையங்கம்
இது விவசாயிகளுக்கும் இனிக்கும் ; மக்களுக்கும் இனிக்கும்
தலையங்கம்

இது விவசாயிகளுக்கும் இனிக்கும் ; மக்களுக்கும் இனிக்கும்

தினத்தந்தி
|
30 Dec 2022 1:26 AM IST

பொங்கல் பரிசு தொகுப்போடு முழு கரும்பை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சாதி, இனம், மதம் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் ஒட்டு மொத்த தமிழகமும் ஒன்றாக திரண்டு கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகையாகும். பச்சரிசியோடு, வெல்லமும் கலந்து பொங்கல் வைத்து தித்திக்கும் கரும்பையும் சேர்த்து சுவைக்கும் இனிய நாள் இது. திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக பொங்கல் சீர்வரிசை அல்லது பொங்கல்படி வந்தால் அங்கு புது மலர்ச்சி, புது மகிழ்ச்சி ஏற்படும்.

அந்தவகையில் தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் சீதனம் போல முதன்முதலாக அரை கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு பை வழங்கும் திட்டம் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியால் 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இவ்வாறு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்துக்கு வித்திட்டவர் கருணாநிதி என்றால் அது மிகையாகாது. அதுபோல முதன்முதலாக பொங்கல் பரிசு பொருட்களோடு ரொக்க பணம் வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். 2013-ம் ஆண்டில் பொங்கல் பொருட்களோடு ரூ.100 மற்றும் கரும்பு துண்டு வழங்க அவர் உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது முதலில் ரூ.1,000-ம், 2021-ல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500-ம் வழங்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் 21 பொருட்களுடன் பொங்கல் தொகுப்பு முழு கரும்புடன் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19 ஆயிரத்து 269 குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000 வழங்கிட உத்தரவிட்டார். கரும்பு இல்லாத பொங்கலா? என்று பொதுமக்களிடம் இருந்தும், அரசின் கொள்முதலை நம்பித்தானே செங்கரும்பை பயிரிட்டோம்... என்று 5 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளும் பொங்கல் தொகுப்போடு கரும்பு வழங்க கோரிக்கை விட்டனர்.

செங்கரும்பை சர்க்கரை ஆலைகளில் விற்க முடியாது. அந்த கரும்பு வேறு, செங்கரும்பு வேறு. அனைவரின் கோரிக்கையை ஏற்று இப்போது அனைத்து பொங்கல் பரிசு தொகுப்போடு முழு கரும்பை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியையும், இனிப்பையும் அளித்துள்ளது. இந்த கரும்பை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக, அதிகபட்சமாக போக்குவரத்து செலவு உள்பட ஒரு கரும்பை ரூ.33 என்று விலை நிர்ணயம் செய்து அவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

கொள்முதல் மற்றும் விலை நிர்ணயத்துக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சீரான வினியோகத்துக்கு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார். விவசாயிகளின் விளைச்சலில் 20 சதவீதம் அரசால் கொள்முதல் செய்யப்படும். அரசே ரூ.33-க்கு கொள்முதல் செய்வதால் மீதம் உள்ள கரும்பையும் சற்றேறக்குறைய அதே விலைக்கு விவசாயிகள் விற்க முடியும்.

மேலும் செய்திகள்